தமிழகத்தில் உள்ள கோவில்களில் பிரசாதம் தயாரிக்க மற்றும் பிற சேவைகளுக்கு வருகின்ற ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஆவின் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட நெய் மற்றும் வெண்ணெய்யை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என  இந்து சமய அறநிலையத்துறை ஆணைப்பிறப்பித்துள்ளது.


தமிழகம் முழுவதும்  இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் சுமார் 44 ஆயிரத்து 218 கோயில்கள் உள்ளன. இங்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் வீடுகளுக்குச் செல்லும் போது பிரசாதங்களை வாங்கிச்செல்ல வேண்டும் என்று நினைப்பார்கள். அவர்களுக்கு வசதியாகவே அனைத்துக்கோவில்களிலும் பிரசாத சென்டர்கள் அமைக்கப்பட்டு விநியோகம் நடைபெற்றுவருகிறது. ஆனால் பக்தர்களுக்கு வழங்கக்கூடிய இந்த பிரசாதங்கள் அனைத்தும்  தரம் குறைவாக இருப்பதாக பல்வேறு குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இதனை சரிசெய்ய வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதோடு அனைத்துக்கோவில்களிலும் சூடம் ஏற்றுவதற்குத் தடை விதிக்கப்பட்ட நிலையில் மக்கள் நெய் விளக்குகளை ஏற்ற ஆரம்பித்தனர். நாளடைவில் இந்த நெய் விளக்குகளின் தரம் குறைந்ததோடு இதனால் சுற்றுச்சூழல் மாசுபாடும் ஏற்பட்டது. இதுக்குறித்தும் பக்தர்கள் மற்றும் ஆன்மீதவாதிகள் பல முறை புகார் தெரிவித்ததன் விளைவாகத் தான், தற்போது இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு ஒன்றைப்பிறப்பித்துள்ளது. அதன்படி, கோவில்களில் தயாரிக்கப்படும் பிரசாதங்களுக்கு வருகின்ற ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஆவின் நெய் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.





இதுக்குறித்து இந்து சமய அறநிலையத்துறைக்கு இணை ஆணையர்களுக்கு, ஆணையர் ஜெ.குமரகுருபரன் சுற்றிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார் அதில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துத்  திருக்கோவில்களில் தயாரிக்கப்படும் பிரசாதங்கள் மற்றும் இதர தேவைகளுக்கு ஆவின் நிறுவனம் மூலம் தயாரிக்கப்படும் வெண்ணெய் மற்றும் நெய் பொருள்களை மட்டும் தான் கொள்முதல் செய்ய உத்தரவிடுமாறும் மற்றும் 15 மில்லி லிட்டர் அளவு கொண்ட பேக்கிங்கிலிருந்து 20 கிலோ கிராம் வரையிலான எடை கொண்ட பேக்கிங் வரை, ஆவின் நிறுவனத்தில் விற்பனைக்குத் தயாராக உள்ளது. எனவே உடனடியாக ஆவின் நிறுவனப் பொருள்களை பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





இதோடு கோவில் கருவறை மற்றும் கோவில் பிரகாரங்களில் ஏற்றப்படும் விளக்குள் அனைத்தும் ஆவினால் தயாரிக்கப்பட்ட நெய்யினைக்கொண்டு தான் ஏற்ற வேண்டும்.  இதனால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதோடு கோவில் வளாகம் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்பதற்காக தமிழக அரசு இந்த உத்தரவை தற்போது பிறப்பித்துள்ளது என ஆணையர் ஜெ.குமரகுருபரன் சுற்றறிக்கையின் வாயிலாக கூறியுள்ளார். ஏற்கனவே தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே தமிழக கோவில் நிலங்களை  ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து தமிழக அரசு மீட்டு வரும் நிலையில் தற்போது இதுப்போன்று அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.