அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் நேற்று மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்ட நிலையில், ஆளுநரின் ஒப்புதலுக்கு இன்று அனுப்பப்பட்டது. 


ஆன்லைன் ரம்மி விளையாட்டு மூலம் தமிழ்நாட்டில் பலர் பணத்தை பறிகொடுத்து பல பேர் தற்கொலையும் செய்து கொண்டனர். இதையடுத்து, இந்த தற்கொலைகளை தடுக்கும் வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டப்பட்டு ஒரு மனதாக ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதன் பின்னர் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


இதனை தொடர்ந்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி 4 மாதம் வரை ஒப்புதல் அளிக்காமல் கடந்த 6ம் தேதி இதுகுறித்து தமிழ்நாடு அரசு போதிய விளக்கம் அளிக்கவில்லை என தெரிவித்து திருப்பி அனுப்பி வைத்தார். ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா திருப்பி அனுப்பப்பட்ட விவகாரம் தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது. 


இதையடுத்து, தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.


இந்தநிலையில், கடந்த 20ஆம் தேதி தமிழ்நாடு நிதிநிலை பட்ஜெட்டை தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்டில் தகுதிவாய்ந்த குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 வரும் செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இது முக்கியமான அறிவிப்பாக பார்க்கப்பட்டது.


அதன் தொடர்ச்சியாக, கடந்த 21ம் தேதி வேளாண் துறை பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதிலும், வேளாண் தொடர்பாக பல முக்கியமான அறிவிப்புகள் வெளியாகின. கடந்த 22ம் தேதி தெலுங்கு வருட பிறப்பு என்பதால் சட்டசபை நடைபெறவில்லை.


நேற்று முதல் பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது. முதல் நிகழ்வாக சபாநாயகர் அப்பாவு மறைந்த எம்.எல்.ஏ திருமகன் உள்பட மறைந்த முக்கிய பிரபலங்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசித்தார். அதன் பின்னர் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை இரண்டாவது முறையாக தாக்கல் செய்தார். அப்போது பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், தமிழ்நாட்டில் இதுவரை 41 பேர் ஆன்லைன் சூதாட்டம் மூலம் உயிரிழந்துள்ளனர். இந்த சட்ட மசோதா அறிவால் அல்ல, உள்ளத்தால் நிறைவேற்றப்படுகிறது என கூறினார்.


ஆன்லைன் சூதாட்ட சட்ட மசோதாவை தாக்கல் செய்த பின்பு எதிர்க்கட்சியினர் இந்த சட்ட மசோதாவை ஆதரித்தனர். அதிலும் முக்கியமாக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தளவாய் சுந்தரம், செல்வப்பெருந்தகை, ஜி.கே மணி என அனைவரும் கருத்து தெரிவித்து தங்களது ஆதரவை வெளிப்படையாக முன் வைத்தனர். பின் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் ஒரு மனதாக ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா இரண்டாவது முறையாக  சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.


இந்த சூழலில் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதா இன்று ஆளுநரின் ஒப்புதலுக்கு இரண்டாவது முறையாக அனுப்பி வைக்கப்பட்டது. பேரவை அலுவலகத்திலிருந்து சட்டத்துறைக்கு அனுப்பிய நிலையில் இன்று ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.