Online Gambling Prohibition Act: ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டத்திற்கு ஒஊபுதல் அளிக்க ஆளுநர் விளக்கம் கேட்டிருந்த நிலையில், தமிழ்நாடு அரசு கடிதம் வாயிலாக விளக்கம் அளித்துள்ளது.  கடந்த அக்டோபர் 19ஆம் தேதி சட்டப் பேரவையில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை எதிர்த்தும், அதனை தடை செய்யவும் சட்டம் இயற்றியது. இதற்கு ஒப்புதல் அளிக்க ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது. 


ஆன்லைன் சூதாட்டத்தை  ஏன் தடை செய்ய வேண்டும், இந்த சட்டத்தை ஏன் அமல் படுத்த வேண்டும் என விளக்கம் கேட்டிருந்தார் ஆளுநர்.  அதற்கு காலக்கெடு வரும் 27ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் தமிழ்நாடு அரசு கடிதம் வாயிலாக விளக்கம் அளித்துள்ளது. 






இது குறித்து சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறுகையில், உலகம் முழுவதும் உள்ள டேட்டாக்களை வல்லுநர்களைக் கொண்டு ஆய்வு செய்தும், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டும் தான் இந்த ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சட்ட மசோதவுக்கு ஆளுநர் விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும். இந்த சட்டம் விரைவில் அமலுக்கு வரும். முதல்வர் ஸ்டாலின் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் கொண்டு வருவதில் மிகவும் உறுதியாக உள்ளார் என கூறினார். 


தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் தொடங்கி குடும்பத் தலைவர்கள் வரை பொதுமக்கள் பலர் ஆன்லைன் சூதாட்டத்தினால் அடிமையாகி, தங்களது பணத்தினை இழந்தது மட்டும் இல்லாமல், தங்களது இன்னுயிரையும் மாய்த்துக் கொண்டனர். பலர் தாங்கள் தற்கொலை செய்து கொண்டது மட்டும் இல்லாமல் தங்களது குடும்ப உறுப்பினர்களையும் கொலை செய்தது மேலும் வேதனைக்குரிய விஷயமாக இருந்தது. 


இதனைத் தொடர்ந்து முதல்வர் உட்பட, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி வந்தனர். தமிழ்நாடு அரசு இந்த ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய பொதுமக்களிடம் கருத்து கேட்டு இருந்தது. அதன் பின்னர் தடைச் சட்டமசோதாவை சட்டசபையில் நிறைவேற்றியது  குறிப்பிடத்தக்கது.