Online Rummy Ban: ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு எதிராக விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.


ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா


ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் தமிழ்நாட்டில் நாள்தோறும் தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்து பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வந்தது. இத்தகைய ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை கடந்த அதிமுக ஆட்சியில் கடுமையாக எழுந்தது. இதனைத் தொடர்ந்து அப்போதைய அதிமுக அரசு ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை நிறைவேற்றியது.  ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் இந்த சட்டத்தை ரத்து செய்தது. 


இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து திமுக தலைமையிலான அரசு அமைந்தது. இதற்கிடையில் தமிழ்நாடு அரசால் கொண்டு வரப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை அவசர சட்ட மசோதாவுக்கு கடந்தாண்டு அக்டோபர் 1 ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். தொடர்ந்து அக்டோபர் 19 ஆம் தேதி ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் இதுதொடர்பாக ஆளுநர் தரப்பில் கேட்ட விளக்கங்களுக்கு தமிழ்நாடு அரசு பதிலளித்திருந்தது. 


ஆளுநர் ஒப்புதல்


ஆனால் 4 மாதங்களுக்கும் மேலாக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பினார். ஆளுநரின் இந்த செயலுக்கு பல்வேறு கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து உயிர்பலி ஏற்படுவதை தடுக்கும் வகையில் மீண்டும் சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தாக்கல் செய்ய  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 


இதன் பின்னர் கடந்த மார்ச் 23 ஆம் தேதி நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை இரண்டாவது முறையாக தாக்கல் செய்தார்.  இதனைத் தொடர்ந்து சட்டமன்றத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஏப்ரல் 10ஆம் தேதி ஒப்புதல் அளித்திருந்தார். 


உயர்நீதிமன்றத்தில் வழக்கு


இந்நிலையில், ஆன்லைன் விளையாட்டு தடை சட்டத்துக்கு எதிராக விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.


இந்த சட்டத்துக்கு தடை விதிக்க கோரியும், ரத்து செய்யக் கோரியும்,  ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் கலைமதி அமர்வில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி சென்னை உயர் நீதிமன்றத்தில் காணொலி வாயிலாக ஆஜராகி முறையீடு செய்தார். முறையீட்டை கேட்ட நீதிபதிகள், மனுத்தாக்கல் செய்து, மனு முறையாக இருந்தால் நாளை விசாரணைக்கு பட்டியலிடப்படும் எனவும், இல்லாவிட்டால் வழக்கமான பட்டியலில் இடம்பெறும் என்றும் தெரிவித்தனர்.