Kodanad Case : கோடநாடு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் இறப்பதற்கு முன் ஜோதிடரை சந்தித்துள்ளார். 


கோடநாடு வழக்கு


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான நீலகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இரவில் ஆயுதங்களுடன் ஸ்டேட்டுக்குள் அத்துமீறி நுழைந்த கும்பல், பாதுகாவலரை கொலை செய்து விட்டு, சில மதிப்புமிக்க பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் பெரும் அதிர்வலைகளை தமிழ்நாட்டில் ஏற்படுத்தியது.


இது தொடர்பாக சயன், சதீசன் , உதயகுமார் , சம்சிர் அலி, தீபு ,சந்தோஷ், திலிப் ஜாய், வாளையார் மனோஜ், மனோஜ்  உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கோடநாடு வழக்கில் தொடர்புடைய 5 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். குறிப்பாக இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார்.


விசாரணை தீவிரம்


அதேபோல கோடநாடு எஸ்டேட்டில் கம்யூட்டர் ஆப்ரேட்டராக பணியாற்றிய தினேஷ்குமார் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். கனகராஜின் நண்பரும், முக்கிய குற்றவாளியான சயன் கேரள மாநிலம் பாலக்காடு அருகே குடும்பத்துடன் செல்லும் போது கார் விபத்தில் சிக்கினார். அதில் சயனின் மனைவி மற்றும் மகள் இருவரும் உயிரிழந்தனர்.


இதனை அடுத்து, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கோடநாடு வழக்கு மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை கடந்த ஆண்டு செப்டம்பரில் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. கூடுதல் டிஜிபி அபய்குமார் சிங் தலைமையில் போலீசார் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  சசிகலா உள்பட 300க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  வழக்கு விசாரணை தொடங்கி 6 ஆண்டுகளாகியும் கொலைக்கான மூலகாரணம் வெளியாகவில்லை.  


ஜோதிடரை விசாரிக்க முடிவு


இந்நிலையில், கோடநாடு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் இறப்பதற்கு முன் ஜோதிடரை சந்தித்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜை கடைசியாக சந்தித்து  பேசிய நபர் என்ற அடிப்படையில் ஜோதிடரிடம் விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு முடிவு எடுத்துள்ளது. கடைசியாக கனகராஜ் சந்தித்தபோது அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஜோதிடர் கூறியதாக தகவல் வெளியான நிலையில், சிறப்பு புலனாய்வு குழு நடவடிக்கை எடுத்துள்ளது.


மேலும், ஜோதிடரை சந்தித்து வீடு திரும்பியபோது கனகராஜ் விபத்தில் உயிரிழந்துள்ளார். இதனால் சேலத்தில் உள்ள எடப்பாடி பகுதியைச் சேர்ந்த அந்த ஜோதிடருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.


சசிகலாவிடம் விசாரிக்க திட்டம்:


இவர் மட்டுமின்றி ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவிடம் சிபிசிஐடி போலீசார் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே, சசிகலாவிடம் மேற்கு மண்டல் ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான போலீசார் கடந்த ஆண்டு விசாரணை நடத்திய நிலையில், இப்போது சசிகலாவிடம் சிபிசிஐடி போலீஸ் விசாரிக்கவுள்ளது.


சில நாட்களுக்கு முன் எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த காவல் உதவி ஆணையர் கனகராஜிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதனை அடுத்து தற்போது, சசிகலா, முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டி மற்றும் ஜோதிடர் ஆகியோரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது.