நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை வழக்கு தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.


சூடுபிடிக்கும் கோடநாடு வழக்கு:


கடந்த 2017 ஏப்ரல் 23ஆம் தேதி ஜெயலலிதாவிற்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் காவலாளியை கொலை செய்துவிட்டு கொள்ளையடிக்கப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. தீவிரப்படுத்தியுள்ளது. சட்டப்பேரவையில் கோடநாடு விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே காரசார விவாதம் எழுந்த நிலையில், இந்த வழக்கை தீவிரப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


அதனடிப்படையில், ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே, சசிகலாவிடம் மேற்கு மண்டல் ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான போலீசார் கடந்த ஆண்டு விசாரணை நடத்திய நிலையில், இப்போது சசிகலாவிடம் சிபிசிஐடி போலீஸ் விசாரிக்கவுள்ளது.


கோடநாடு வழக்கில் தன்னை சிக்க வைக்க சதி நடப்பதாக கடந்த ஆண்டு சட்டப்பேரவையை புறக்கணித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் தர்ணாவில் ஈடுபட்டது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. பின்னர், பல்வேறு அரசியல் காரணங்களால் கோடநாடு வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்பட்ட நிலையில், திடீரென வழக்கை மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகரிடமிருந்து சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார்.


வழக்கின் ஆவணங்கள் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், கடந்த 21ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது அவரின் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிய உதவி ஆணையரின் சென்னை இல்லத்தில் சிபிசிஐடி போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.


சசிகலாவிடம் விசாரணை


இந்நிலையில், கோடநாடு பங்களா குறித்து அனைத்து விவரங்களும் அறிந்த சசிகலாவிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். கடந்த முறை சசிகலாவிற்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அவரது உடல்நிலையை கருத்தில்கொண்டு சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்திற்கே ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் வருகை புரிந்து ஒரு நாள் முழுவதும் விசாரணை நடத்தினர்.


இந்த முறை சசிகலாவை சென்னையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழக அரசியல் களத்தில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வரும் சூழலில் மீண்டும் கோடநாடு கொலை கொள்ளை வழக்கு சூடுபிடித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




மேலும் படிக்க


Kodanad Case: கோடநாடு வழக்கு; எடப்பாடி ஜோதிடரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி திட்டம் - என்ன காரணம்?