திருவண்ணாமலை (Tiruvannamalai News): திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் கல்வி உதவித்தொகை பெற வருகிற செப்டம்பர் மாதம் 10-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு (2023 - 2024-ம் கல்வி ஆண்டிற்கு) கல்வி உதவித்தொகை 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு படிப்பவர்களுக்கு ரூ.1000-ல் இருந்து ரூ.2 ஆயிரம்,6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரம், 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரம், இளநிலை கல்விக்கு ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.12 ஆயிரம், முதுநிலை மற்றும் தொழிற்கல்விக்கு ரூ.7 ஆயிரத்தில் இருந்து ரூ.14 ஆயிரம் என கல்வி உதவித்தொகையாக உயர்த்தி வழங்கப்படுகிறது. 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை பயிலும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகையோடு கூடுதலாக வாசிப்பாளர் உதவித்தொகை ரூ.3 ஆயிரம், இளநிலை கல்விக்கு ரூ.5 ஆயிரம், முதுநிலை கல்விக்கு ரூ.6 ஆயிரம் வாசிப்பாளர் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.


 




 


செப்டம்பர் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும் 


இந்த கல்வி உதவித்தொகை பெறுவதற்காக http://www.tncsevai.tn.gov.in/citizen/registration:aspx என்ற இணையதளத்தில் வருகிற செப்டம்பர் மாதம் 10-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதோடு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல் (மருத்துவ சான்றுடன்), மாணவர் மற்றும் பாதுகாவலர் வங்கி இணை கணக்கு புத்தகம், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், மாற்றுத் திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை நகல் மற்றும் தலைமை ஆசிரியர் அல்லது கல்லூரி முதல்வரோடு பெற்ற போனோபைடு சான்றுகளுடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் தொலைபேசி எண்ணில் 04175-233626 தொடர்பு கொண்டு கூடுதல் தகவல்களை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.