”முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான் என ஆளுநர் மாளிகையில் தமிழ்நாட்டின் 21வது முதலமைச்சராக திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது அமைச்சரவை பதவியேற்றுக் கொண்டு ஓராண்டு நிறைவடைகிறது.மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்துப் பயணம், வீட்டை நிர்வகிக்கும் பெண்களுக்கான மாதாந்திர ஊதியம், மாநில உரிமையை மீட்பது , நீட் தேர்விலிருந்து விலக்கு என பிரகாசமான வாக்குறுதிகளுடன் வந்த திமுகவின் தேர்தல் அறிக்கைதான் அவர்கள் வெற்றிபெற பெரும்பலமாக அமைந்தது. வாக்குறுதிகளில் பல சமூகநீதியை அடித்தளமாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை. ஆட்சிக்கு வந்தபிறகு இவற்றில் அரசு நிறைவேற்றியது என்னென்ன? ஒரு பார்வை. 


’கடவுளை மற மனிதனை நினை” என்ற பெரியார், ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற அண்ணா என கடவுள் மறுப்பாளர்கள் வழி வந்த கட்சி என்றாலும் இந்த திமுக அரசு அதிகம் நிறைவேற்றியது என்னவோ இந்துசமய அறநிலையத்துறை சார்ந்த திட்டங்களைத்தான். அந்த வரிசையில் இந்த அரசு 2860 கோடி கோவில் நிலங்களை மீட்டுள்ளதாக கணக்கு சொல்கிறது. இன்னும் மீட்கப்படும் என்று அந்தத்துறை அமைச்சர் சேகர்பாபு. 
 அனைத்துசாதியினரும் அர்ச்சகராகலாம் சட்டத்தின் கீழ் பயிற்சிப்பள்ளியில் பயின்று பட்டம்பெற்ற 58 அர்ச்சகர்களுக்கு பணிநியமன ஆணையை சென்னை மயிலாப்பூரில் நடந்த நிகழ்வொன்றில் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். இதுதவிர பயிற்சிப்பள்ளியில் பெண்களும் அர்ச்சகராவதற்கான பயிற்சிகள் தொடங்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் அறிவித்த நிலையில் அதற்கான திட்டங்களும் செயல்படுத்தப்பட்டுள்ளன. 


நீட் தேர்வு விலக்குக்குதான் முதல் கையெழுத்து என வாக்குறுதி அளித்திருந்தாலும் முதலமைச்சர் ஸ்டாலின் அரசு அதற்கான கையொப்பத்தை இடாமல் அதற்கான ஆய்வுக்குழுவை ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் அமைத்தது. இது கடும் விமர்சனத்தைச் சந்தித்தாலும் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் நீட் தேர்வு விலக்கு கோரி மத்திய அரசுக்கு கோரிக்கை அனுப்பிவைக்கப்பட்டது. நீட் விவகாரம் தொடர்பான முடிவுகள் இன்னும் இழுபறியில் உள்ளது என்றாலும் விலக்கு என்கிற நிலைப்பாட்டில் திமுக அரசு தீர்மானமாக உள்ளது. 


பெண்களுக்கான கட்டணமில்லாப் பேருந்துப் பயணம் என்கிற  அறிவிப்பைக் கொண்டு வந்த அரசு பேருந்துகளில் வெள்ளைப் பலகைப் பேருந்துகளில் மட்டும் இலவசம் என்கிற அறிவிப்பைக் கொண்டு வந்தது. இதுமட்டுமல்லாமல் திருநங்கைகளும் கட்டணமில்லாமல் பேருந்துகளில் பயணிக்கலாம் என அறிவித்தது. அரசுப் பணிகளில் மகளிருக்கான இடஒதுக்கீடு 40 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டது சர்ச்சைக்குள்ளானது என்றாலும் பெருவாரியான நபர்களால் அதுவும் வரவேற்கப்பட்டது. திமுக தொடுத்திருந்த வழக்கின் அடிப்படையில் உயர்கல்வி மருத்துவப் படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டியது. வீட்டைப் பராமரிக்கும் பெண்களுக்கான ஊதியத் தொகை அறிவிப்பு இன்னமும் கிடப்பில் உள்ளது என்பதும் ஒருபக்கம் கவனிக்க வேண்டியது. ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் இதுபோன்ற சமூகநீதி சார்ந்த செயல்பாடுகளை திமுக அரசு மேற்கொண்டுள்ளது.