கடந்த மே 28-ஆம் தேதி அன்று காணொலி வாயிலாக நடந்த ஜி.எஸ்.டி கவுன்சிலின் 43-வது கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்டு பேசிய நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மற்ற வளர்ந்த நாடுகளுடன் இந்தியாவை ஒப்பிடும்போது மாநிலங்கள், மாவட்டங்கள், மாநகரங்களுக்கு நிதி அதிகாரங்களையும் பொறுப்புகளையும் பகிர்ந்தளிப்பதில் இந்தியா பின் தங்கி இருப்பதாக பேசி இருந்தார். மேலும் நேற்றைய தினம் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், ஜி.எஸ்.டி கவுன்சிலில் ஒரு மாநிலத்திற்கு ஒரு வாக்கு என்ற நடைமுறை வளர்ந்த மாநிலங்களை பாதிப்படைய செய்வதாகவும், இந்த நடைமுறையால் வளர்ந்த மாநிலங்களுக்கு கிடைக்க வேண்டிய வரி வருவாய் விகிதம் குறைந்து போவதாகவும் இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் எனவும் செய்தியாளரிடம் தெரிவித்தார். 



தமிழக நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் கருத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி ஆதரவு தெரிவித்துள்ளார். ஜி.எஸ்.டி கவுன்சில் விவகாரம் தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்து முடிந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் மாநிலங்களுக்கு நியாயம் வழங்கும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறதா என்ற கேள்வியை எழுப்புவதாக தெரிவித்துள்ளார். அதிக ஜி.எஸ்.டி வருவாய் தரும் எதிர்க்கட்சிகள் ஆளும் மேற்கு வங்கம், ராஜஸ்தான், தமிழ்நாடு, கேரளா, சத்தீஸ்கர், பஞ்சாப், டெல்லி, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களின் கோரிக்கைகளைப் அரசியல் உள்நோக்கத்தோடு பார்ப்பது வேதனை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார் கே.எஸ்.அழகிரி.


 



ஜி.எஸ்.டி கவுன்சிலில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு வாக்கு என்பது ஏற்க கூடியதல்ல எனவும் வரிவருவாய் அதிகமுள்ள மாநிலங்களும் வரிவருவாய் குறைந்த மாநிலங்களும் ஒன்றாக கருதப்படுவது மிகப்பெரிய அநீதியாகும் என அவரது அறிக்கையில் தெரிவித்துள்ளார். மாநிலங்களை பொறுத்தவரையில் தனது வருமானத்தில் 50% வருமானத்தை ஜி.எஸ்.டி வரி வருவாய் மூலம் மட்டுமே பெற்று வருகிறது. இதில் பாஜக ஆட்சி செய்யாத 14 மாநிலங்களில்தான் இந்திய மக்கள் தொகையில் 50 சதவீதத்தினர் வசித்து வருகின்றனர். மொத்த ஜிஎஸ்டி வருவாயில் 60 சதவீதமும் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60 சதவீதமும் பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் இருந்து வரும் நிலையில் பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களின் கோரிக்கைகளை பாரபட்சத்துடன் பார்ப்பது வேதனை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். கொரோனா தொற்று நிவாரண பொருட்களுக்கு பூஜ்ஜிய வரி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை கூட மத்திய அரசு ஏற்காததை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அவர். மத்திய அரசின் இத்தகைய போக்கு நீடிக்குமானால் கூட்டாட்சி கொள்கையே கடுமையான பாதிப்புக்குள்ளாக நேரிடும் என குறிப்பிட்டுள்ளார்