மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மைதிலி சிவராமன் காலமானார். கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவராக மைதிலி சிவராமன் இருந்தார். தேசிய அளவில் தலைசிறந்த பத்திரிக்கையாளராக விளங்கியவர். கீழ்வெண்மணிப் படுகொலைகளை உலகின் கவனத்துக்கு கொண்டு வந்ததில் மைதிலியின் பங்கு குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வு குறித்து அவர் எழுதிய பத்திகளும் கட்டுரைகளும் “ஹாண்டட் பை ஃபையர்” (Haunted by Fire) என்ற தலைப்பில் நூலாக வெளியாகின.
பெண்களும் மதசார்பின்மையும் (1993), பெண்ணுரிமை (1997) , ஆண் குழந்தை தான் வேண்டுமா? (2005), ஹாண்டட் பை ஃபையர் போன்ற இவரது புத்தகங்கள் பெண் உரிமைகள் பற்றியம், குறிப்பாக எளிய பட்டியலின பெண்கள் உரிமைகள் பற்றியும் தீவிர விவாதத்தை முன்னெடுத்தது.
1992ம் ஆண்டு தர்மபுரி மாவட்டத்தின் அரூர் அருகே உள்ள ஆதிவாசி பழங்குடியினர் மீது வன்முறை சம்பவங்களை (வாச்சாத்தி வன்முறை) உலகறிய செய்தவர். இந்திய பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் தோன்றி வாதிட்டார். 2021, மார்ச் மாதம் சர்வதேச மகளிர் தினத்தன்று, இவர் எழுதிய "ஒரு வாழ்க்கையின் துகள்கள்" என்ற புத்தகம் வெளியானது.
"ஈடு செய்யமுடியாத பேரிழப்பு" - ராசாவின் மனைவி மறைவுக்கு வைகோ இரங்கல்
1966-68 காலகட்டத்தில் ஐநா சபைக்கான இந்திய நிரந்தர தூதுக்குழுவில் ஆய்வு உதவியாளராகப் பணியாற்றினார். மூன்றாம் உலக நாடுகளில் தன்னாட்சி அதிகாரம் இல்லாத பகுதிகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் காலனிமயமழிதல் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தார். ஐநா சபைப் பணிக்காலம் முடிந்த பின் இந்தியா திரும்பி இடதுசாரி இயக்கத்தில் இணைந்து செயல்பட்டார். அன்றைய தஞ்சையில் நிலப்பிரபுத்துவத்தின் அனைத்து ஒடுக்குமுறைகளையும் எதிர்த்து களம் இறங்குவதற்கு அடிப்படையாக இருந்த நில உறவுகளை ஆய்வு செய்து பல கட்டுரைகளை இவர் வெளியிட்டார் .