கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை நேரடியாகச் சென்று மருத்துவமனைகளில் பார்வையிட்டு அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் கேட்டறிந்தார் அதன்பின்னர் சட்டமன்ற அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, “தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்று 22 நாட்களில் அனைவரும் பாராட்டும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் சீரிய முயற்சியினால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் விகிதம் குறைந்துள்ளது. கடந்த வாரங்களில் பரிசோதனைக்கு வருபவர்களில் 30 சதவீதத்திற்கு மேல் நோயாளிகளாக கண்டறியப்பட்ட நிலையில் இன்று அது படிப்படியாக குறைந்து 16 முதல் 17 சதவீதம் என்ற அளவுக்கு சரி பாதியாக குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் முதலமைச்சர் மேற்கொண்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளாகும்.

 

மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அமைச்சர்களை நியமித்து அமைச்சர்கள் இல்லாத மாவட்டங்களில் வேறு ஒரு மாவட்ட அமைச்சரை நியமிக்க களத்தடுப்பு பணிகளில் ஈடுபடுத்தி உள்ளார். அவர்கள் மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்து மருத்துவர்கள், செவிலியர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்து பொதுமக்களுக்கு தொற்று ஏற்படாத வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவித்தார்.

 

மேலும் திருவாரூர் மாவட்டத்தில் தூர்வாரும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டு நடைபெற்று வருவதாகவும், திருவாரூர் மாவட்டத்திற்கு 16 கோடியே 34 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு 1782 கிலோ மீட்டர் தூரம் வடிகால் வாய்க்கால், பாசன வாய்க்கால் மற்றும் ஆறுகளை தூர்வாரும் பணிகள் தற்போது துவங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். அனைத்து இடங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு முழுமையாக ஆறுகள் வாய்க்கால்கள் தூர்வாரப்படும் என தெரிவித்தார்.

 

தொடர்ந்து பேசிய பூண்டி கலைவாணன், ”திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் விவசாயத்தை மட்டுமே நம்பி இருக்கக்கூடிய மாவட்டங்களாகும். இந்த மாவட்டங்களில் கடந்த காலங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல் மூட்டைகளை விற்பனை செய்வதற்கு 40 ரூபாய் கமிஷன் பெற்றுக்கொண்டு அதிகாரிகள் நெல்லை கொள்முதல் செய்து வந்தனர். இதனால் விவசாயிகள் பல்வேறு துன்பத்திற்கு ஆளாகினர். 


 

இதனை கருத்தில்கொண்டு, முதல்வர் ஸ்டாலின் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை முட்டைகளை கொள்முதல் செய்வதற்கு ஒரு பைசாகூட வாங்கக் கூடாது என முதல்வர் உத்தரவிட்டுள்ளார் இதை திருவாரூர் மாவட்டத்திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகம் முழுவதும் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்வதற்கு யாரும் பணம் தர வேண்டாம். அப்படி அதிகாரிகள் பணம் கேட்டால் உடனடியாக புகார் தெரிவியுங்கள் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் எனவும், மேலும் வெளி மாவட்ட நெல்லை கொள்முதல் செய்யக்கூடாது என்கிற விதி அமலில் இருக்கும் போதிலும் கடந்த ஆட்சி காலத்தில் வெளி மாவட்ட தனியார் வியாபாரிகளின் நெல் ஆயிரக்கணக்கான டன் கணக்கில் கொள்முதல் செய்யப்பட்டு அதிகாரிகளும் துறை அமைச்சரும் பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஆனால் தற்போது காவல்துறை உதவியோடு வெளி மாவட்ட நெல் ஒரு மூட்டை கூட கொண்டுவந்து கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய முடியாத அளவிற்கு கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என தெரிவித்தார்