தனக்கே தெரியாத “சமூகநீதி” பற்றி தி.மு.க.விற்குப் பாடம் எடுக்க வேண்டாம் என்றும் எப்போதுமே தனக்குத் தெரியாத விஷயங்கள் பற்றி வாய் கிழியப் பேசுவதில்  பழனிசாமி அவர்களுக்கு நிகர் அவரேதான் என்று டி.ஆர். பாலு கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:


குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ள அ.தி.மு.க.வின் “முன்னாள் இணை ஒருங்கிணைப்பாளர்” பழனிசாமி - தனக்கே தெரியாத “சமூகநீதி” பற்றி தி.மு.க.விற்குப் பாடம் எடுத்திருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். எப்போதுமே தனக்குத் தெரியாத விஷயங்கள் பற்றி வாய் கிழியப் பேசுவதில் பழனிசாமி அவர்களுக்கு நிகர் அவரேதான் என்பது எனக்குத் தெரியும்.


திராவிட முன்னேற்றக் கழகமும், முத்தமிழறிஞர் கலைஞரும்தான் பட்டியலினச் சமூகத்திலிருந்து – அறிவுசார்ந்த மாபெரும் தலைவரான  கே.ஆர்.நாராயணன் அவர்களை இந்த நாட்டின் குடியரசுத் தலைவராக ஆக்கியது. இந்திய நாடாளுமன்றத்தின் மாண்புமிகு பேரவைத் தலைவராக - மிகச் சிறந்த நிர்வாகியான பாபு ஜெகஜீவன்ராம் அவர்களின் மகள் மீராகுமார் அவர்கள் தேர்வு செய்யப்படுவதற்குத் திராவிட முன்னேற்றக் கழகம்தான் உறுதுணையாக இருந்தது. பட்டியலின - பழங்குடியின மக்களுக்கு இட ஒதுக்கீட்டை உயர்த்தியது மட்டுமல்ல - உள்இடஒதுக்கீடு அளித்து உண்மையான சமூகநீதியை அளித்தது தி.மு.க. அரசும் - முத்தமிழறிஞர் கலைஞரும்தான் என்ற பாலபாடம் எல்லாம் பாவம் பழனிசாமிக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. அதைத் தெரிந்து கொள்ளும் மனநிலையிலும் அவர் இல்லை.


தன் கட்சியின் பொதுக்குழுவில், அம்மையார் ஜெயலலிதா அமர்ந்த பொதுச் செயலாளர் பதவியில், தான் எப்படிக் குறுக்குச் சால் ஓட்டி அமருவது, அதற்குக் கோடி கோடியாகக் கரன்சி நோட்டுகளை எப்படி அள்ளி விடுவது, ஒவ்வொரு நாளும் பொதுக்குழு உறுப்பினர்களை எப்படி விலைக்கு வாங்குவது என்ற ஆலோசனையில் அவர் மூழ்கியிருப்பது ஒருபுறமிருக்க, ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இருவரில் யார் பதவியில் இருக்கிறார்கள், யாரின் கீழ் கட்சி இருக்கிறது என்பது எல்லாம் தெரியாமல் தவிக்கிறார். அ.தி.மு.க திக்குத் தெரியாத காட்டில் - திசை தெரியாத ரூட்டில் பயணித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் பா.ஜ.க. நிறுத்தியுள்ள குடியரசுத் தலைவர் வேட்பாளரை ஆதரிக்க - புலி வேடம் போட்டுத் தி.மு.க மீது பாய்கிறார்.


அ.தி.மு.க.விற்கு என்று ஒரு தலைமைக் கழகம் இருந்தும் - அங்கே குடியரசுத் தலைவர் வேட்பாளரை அழைத்து தங்கள் ஆதரவைக் கொடுக்க முடியாமல் – பிளவுபட்டு - ஆளுக்கொரு பக்கம் நின்று “தண்ணீர் பாட்டில்” வீசிக் கொண்டிருக்கும் பழனிசாமி போன்றவர்களுக்கு நாவடக்கம் முதலில் தேவை. பா.ஜ.க.வுடன் கூட்டணி என்றாலும், குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கு ஆதரவு என்றாலும் அ.தி.மு.க தலைமை அலுவலகத்தைத் தேர்வு செய்யாமல் - நட்சத்திர ஹோட்டலில் அரசியல் நடத்தும் பழனிசாமி போன்றோர் தி.மு.க.வின் சமூகநீதி வரலாற்றைச் சற்று படித்துப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.


குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான ஆதரவைக் கூட - தங்களுக்குள் “முன்னாள் ஒருங்கிணைப்பாளர்” “முன்னாள் இணை ஒருங்கிணைப்பாளர்” எனப் போட்டி போட்டுக் கொண்டு - உண்மையான அ.தி.மு.க.விற்கு யார் தலைவர் என்ற நிலை தெரியாமல் அளித்திருக்கும் இந்த ஆதரவுக்கு வேறு காரணம் தேட முடியாது என்பதால் தி.மு.க.வை வீண் வம்புக்கு இழுத்து - தன் கட்சிக்குள் நடக்கும் “ஸ்ரீவாரி மண்டப” கூத்துக்களை மறைக்க பழனிசாமி முயற்சி செய்கிறார். அது நடக்காது.


இன்னும் சில நாட்களில் இந்த “கூத்து” மிக மோசமான - குழாயடிச் சண்டையாக மாறப் போகிறது என்பதில் சந்தேகமில்லை. தனது நாற்காலியே ஆடிக்கொண்டிருக்கும் போது, இத்தகைய அதிகப்பிரசங்கி வேலையை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும்!


திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை ஜனநாயக ரீதியாக எதிர்கட்சிகளின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தி - ஜனநாயகத்தை, கூட்டாட்சித் தத்துவத்தை, மதச்சார்பி்ன்மையை, மாநில உரிமைகளை மதிக்கும் ஒரு குடியரசுத் தலைவர் வேண்டும் என்ற நோக்கில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரை ஆதரிக்கிறது. அதைக் கூட புரிந்து கொள்ள முடியாமல் - அ.தி.மு.க உட்கட்சிச் சண்டையில் – தன் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள பா.ஜ.க. அடிவருடி என்ற பட்டத்தைத் தான் தூக்கிச் சுமக்க வேண்டும் என்று பழனிசாமி ஆசைப்படுகிறார்.  அதை அவர் தாராளமாகச் செய்யட்டும். ஆனால் திராவிட முன்னேற்றக் கழகத்தையும் - சமூகநீதியையும் கொச்சைப்படுத்தும் ஈனச் செயலில் அவர் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.


இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.