தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு கடந்த மே மாதம் பொறுப்பு ஏற்றுக்கொண்டது. தி.மு.க. அரசு பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு, 16வது சட்டமன்றத்தின் முதல் பேரவைக்கூட்டத் தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது.


இந்த கூட்டத்தில் இன்று ஆளுநர் உரையின் மீது நன்றி தெரிவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது, அவர் “ மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என்று மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். விவசாயிகளின் நலன் கருதி வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படும். அதுபோல, குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் திரும்ப பெற வேண்டும் என்று பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும்.




ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாம் நடைபெறுவதால் இந்த கூட்டத்தொடரில் தீர்மானங்கள் நிறைவேற்றுவது அவை மாண்புக்கு உகந்ததாக இருக்காது. எனவே, வரும் ஜூலை மாதம் நடைறெ உள்ள நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.”


இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.


பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2019ம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா மற்றும் புதிய வேளாண் சட்ட மசோதாக்களை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றியது. குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இஸ்லாமியர்கள் பெரும்பாலும் பாதிக்கப்படுவார்கள் என்றும், வேளாண் திருத்தச் சட்டங்களால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும், வேளாண் மசோதாவில் நெல்லுக்கான ஆதார விலை இல்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.


இதன் காரணமாக, கொரோனா முதல் அலைக்கு முன்பு வரை வேளாண் மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகளும், குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி பொதுமக்களும் டெல்லியில் போராட்டம் நடத்தி வந்தனர். கொரோனா பரவல் காரணமாக தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படவில்லை.




மத்திய அரசின் இந்த மசோதாக்களுக்கு அப்போதைய எதிர்க்கட்சியான தி.மு.க.வும், அப்போதைய எதிரக்கட்சித் தலைவரும், தற்போதைய முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தை தெரிவித்திருந்தார். மேலும், இந்த மசோதாக்களை திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


இந்த நிலையில், நேற்று தொடங்கிய சட்டமன்ற கூட்டத்தின் ஆளுநர் உரையிலும் ஒன்றிய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டங்களை ரத்து செய்யவும், மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறவும் ஒன்றிய அரசை வலியுறுத்துவோம் என்று கூறப்பட்டிருந்தது. இந்த சூழலில், தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கும் கூட்டத்தொடரில் புதிய வேளாண் திருத்த சட்டம் மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டங்களுக்கு எதிராக மசோதா நிறைவேற்றப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


 


மேலும் படிக்க : தேர்தல் எப்பொழுது வந்தாலும் சந்திக்க தயார் - பாஜக தலைவர் முருகன்