நடிகர் ரஜினிகாந்துக்கு சொந்தமான ஆஷ்ரம் பள்ளி செயல்பட்டு வருகிறது, இதை லதா ரஜினிகாந்த் நடத்தி வருகிறார். இந்த பள்ளி குறித்து அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வெளிவருவது வழக்கம். கடந்த வருடம், லதா நடத்தும் ஆஸ்ரம் பள்ளி காலி செய்வது தொடர்பாக சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.


ரூபாய் 1.99 கோடி வாடகை பாக்கி செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டு, அதற்கு லதா ரஜினிகாந்த் தரப்பில் விளக்கம் தந்து, மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், இன்னொரு புகார் ஒன்று ஆஷ்ரமம் குறித்து கிளம்பி உள்ளது. ஒன்றரை ஆண்டுகளாக அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியம் தரவில்லை என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



சென்னை வேளச்சேரியில் ரஜினிகாந்தின் ஆஷ்ரம பள்ளி இயங்கி வருகிறது. இதில் 150-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த ஒன்றரை வருடகாலமாகவே ஊதியம் வழங்கவில்லை என் புகார் எழுந்துள்ளது. அதனால், பள்ளி நிர்வாகத்தின் செயல்பாட்டைக் கண்டித்து ஊழியர்கள்  பள்ளி வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஊழியர்கள், "கொரொனோ காலகட்டத்தில் தங்களுக்கான முறையான ஊதியத்தை வழங்காமல் பள்ளி நிர்வாகம் எங்களை வஞ்சிக்கிறது. சம்பளத்தை பற்றி கேட்டாலே இழுத்தடிக்கிறார்கள்.நாங்கள் வருமானம் இல்லாமல் மிகுந்த அவதிப்பட்டு வருகிறோம். அதனால், நாங்கள் படும் கஷ்டத்தை மனதில் கொண்டு, ரஜினிகாந்த் தன்னுடைய சொந்த பணத்திலிருந்து தங்களுக்கான ஊதியத்தை வழங்க வேண்டும். ஊழியர்களுக்கு நிர்வாகம் வழங்க வேண்டிய பங்களிப்பு தொகையும் எங்களுக்கு இதுவரை வந்து சேரவில்லை. அதை பற்றி கேட்டாலும் உரிய பதில் எங்களுக்கு கிடைப்பதில்லை." என்று பள்ளி ஊழியர்கள் அடுக்கடுக்காக குற்றஞ்சாட்டினர்.


இதேபோல்தான் கடந்த சில வருடங்களுக்கு முன்பும் பிரச்சனை ஏற்பட்டது. நான்கு வருடங்களுக்கு முன்பு, சம்பளம் தரவில்லை என்று ஊழியர்கள் திடீர் போராட்டம் நடத்தினார்கள். ஊழியர்களுக்கு ஆறு மாதங்களாக சம்பளம் வழங்காமல் உள்ளதாக சொல்லி, பள்ளியின் வாகன ஓட்டுனர்கள் பள்ளி வாகனங்களை இயக்காமல், போராட்டத்தில் ஈடுபட்டனர்.



அதே போல் ஆசிரியர்கள் சம்பளம் தராததால் கொந்தளித்து பள்ளி வளாகத்திலேயே அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதற்கு பிறகு பள்ளி நிர்வாகம் ஆசிரியர்கள் மற்றும் அங்கு பணியில் இருந்தவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இப்போது மீண்டும் அதுபோலவே ஒரு பிரச்சனை கிளம்பி உள்ளது பரபரப்பை கூட்டி வருகிறது.


ஊழியர்களுக்கு நிர்வாகம் வழங்க வேண்டிய பங்களிப்பு தொகையினையும் இதுவரை நிர்வாகம் செலுத்தாமல் இருப்பதாகவும் ஊழியர்கள் தெரிவித்தனர்.