ராஜீவ்காந்தி கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக, பரோல் உள்ள நிலையில், மற்றொருவரான ரவிச்சந்திரனும் 2 மாதம் பரோல் கேட்டு நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.அவரது வழக்கை பரிசீலிக்க உள்துறைச் செயலருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரும் 28 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை உள்ளனர். இவர்களில், பேரறிவாளன் உடல்நிலையை காரணம் காட்டி, பரோலில் இருந்து வருகிறார். அவருக்கு தி.மு.க அரசு தொடர்ந்து விடுப்பு அனுமதித்து வருகிறது. இதையடுத்து, ஏற்கனவே நளினி, முருகன், ரவிச்சந்திரன் உள்பட பலர் பரோல் கேட்டு சிறைத்துறையிடம் விண்ணப்பித்தனர். ஆனால், அவர்களுக்கு பரோல் வழங்க அரசு மறுத்து விட்டது. இந்த நிலையில், ரவிச்சந்திரனுக்கு 2 மாதம் பரோல் கேட்டு சிறைத்துறைக்கு வழங்கியுள்ள மனுவை பரிசீலித்து, தனக்கு பரோல் வழங்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில், அவர் சார்பில் அவரது அம்மா வழக்கு தொடர்ந்துள்ளார்.



 

மனுவில், 'முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ரவிச்சந்திரன், பேரறிவாளன், நளினி, முருகன் உட்பட 7 பேர் 28 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்கள் 7 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி தமிழ்நாடு அரசு அமைச்சரவையில் 9.9.2018 தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானம் தற்போது குடியரசுத் தலைவர் முன்பு உள்ளது. இதற்கிடையில் எனது ஒரு கண்ணில் கடந்தா 2019 ஆகஸ்ட் 2-ல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது என் உடனிருந்து கவனிப்பதற்காக ரவிச்சந்திரனை வெளியில் விட 2 முறை மனு அளித்தேன். இரு மனுக்களையும் சிறை அதிகாரிகள் நிராகரித்துவிட்டனர். தற்போது, எனது மற்றொரு கண்ணில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் ரவிச்சந்திரனுக்கு 2 மாதம் பரோல் விடுமுறை வழங்கக் கோரி இந்த ஆண்டு ஜூன் 26-ம் தேதி சிறைத்துறை அதிகாரியிடம் மனு அளித்தேன். என் மனுவைப் பரிசீலித்து ரவிச்சந்திரனை 2 மாத பரோலில் விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும்' என்று கூறப்பட்டிருந்தது.



 

இந்த மனு உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் பாரதிதாசன், நிஷாபானு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் திருமுருகன் வாதிட்டார். விசாரணையின்போது, பேரறிவாளனுக்கு பரோல் வழங்கப்பட்டு இருப்பதையும் எடுத்துக்காட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மனுதாரரின் மனுவை முன்னுரிமை அடிப்படையில் தமிழக உள்துறைச் செயலர் சட்டப்படி பரிசீலித்து 6 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.