தமிழ் வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கையின்போது அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழ் சங்க இலக்கியங்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு திராவிடக் களஞ்சியமாக வெளியிடப்படும் என அறிவித்தார். அது சீமான், பெ.மணியரசன் உள்ளிட்ட தமிழ் தேசிய அரசியல்வாதிகளிடையே பெரும் எதிர்ப்பைச் சந்தித்தது.


இந்த எதிர்ப்பைத் தனிக்கும் வகையில் தான் சொன்னது குறித்த விளக்க அறிக்கை ஒன்றை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ளார். அதில் ’சங்க இலக்கிய வாழ்வியலை நூலாக வெளியிடுதல் மற்றும் திராவிடக் களஞ்சியம் வெளியிடுதல் தொடர்பாகச் சில தவறான தகவல்கள் சிலரால் ஊடகங்களில் திட்டமிட்டுப் பகிரப்படுகின்றன.






தமிழ் வளர்ச்சித் துறையின் அறிவிப்பில் உள்ள சங்க இலக்கியத்தைத் தொகுப்பது தொடர்பான 10ஆவது அறிவிப்பு இரண்டு அம்சங்களைக் கொண்டது முதலாவது. இளைய தலைமுறையினருக்குச் சங்க இலக்கியச் செல்வத்தை கொண்டு சேர்க்கும் வகையில் சந்தி பிரிக்கப்பட்டு எளிமையான பதிப்புகள் வெளியிடப்படும் என்பது இரண்டாவது அம்சம் கால்டுவெல் தொடங்கி எமனோ. பர்ரோ, அஸ்கோ பார்போலா, ஐராவதம் மகாதேவன், ஆர்பாலகிருஷ்ணன் போன்ற திராவிடவியல் அறிஞர்களின் ஆய்வுகள். திராவிட இயக்கம், சுயமரியாதை, சமூக-நீதி, இட ஒதுக்கீடு, இரு மொழிக் கொள்கை, மாநில சுயாட்சி போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்துக் கடந்த 150 ஆண்டுகளில் தமிழக, இந்திய மற்றும் வெளிநாட்டு அறிஞர்கள் எழுதிய தலையங்கங்கள், கதைகள், கவிதைகள். கட்டுரைகள் மற்றும் ஆராய்ச்சிக் கட்டுரைகளைத் தொகுத்துத் திராவிடக் களஞ்சியம் என்ற தனி நூலாக வெளியிடப்படும் என்பதாகும்.


மேற்சொன்ன இரண்டு பணிகளும் தனித்தனியான செயல்பாடுகள்.


எனவே, அறிவிப்புகளைத் தெளிவாகப் புரிந்துகொள்ளாமல் யாரும் தேவையற்ற குழப்பங்களை உருவாக்க முயல வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்’ எனக் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். 


முன்னதாக இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டிருந்த  அறிக்கையில், ‘சங்கத்தமிழ் இலக்கியங்களைத் தொகுத்து அவற்றிற்கு 'திராவிடக் களஞ்சியம்' எனப்பெயர் சூட்டப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருப்பது பேரதிர்ச்சி தருகிறது. தமிழர்களின் அறிவுக்கொடைகளாக இருக்கும் பழந்தமிழ் இலக்கியங்களை, 'திராவிடக் களஞ்சியம்’ என் அடையாள மாற்றம் செய்ய முயனும் திமுக அரசின் செயல் தமிழினத்திற்கெதிரான மிகப்பெரும் மோசடித்தனமாகும். மனு ஸ்மிருதியிலிருந்து எடுத்தாளப்பட்ட வடச்சொல்லான. 'திராவிடம்' என்பதனைக் கொண்டு, ஆரியத்திற்கு நேரெதிராகத் தனித்துவத்தோடு நிற்கும் தன்னிகரில்லா தமிழ்மொழியையும், தமிழ்ப்பேரினத்தையும் அடையாளப்படுத்தும் இழிநிலைக்கெதிராகக் கருத்தியல் பரப்புரையும். அரசியல் போரும் நடத்திக்கொண்டிருக்கும் வேளையில், தமிழின் தொன்மக் களஞ்சியங்களையும் இல்லாத திராவிடத்தின் பெயரால் அடையாளப்படுத்தும் கொடுஞ்செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. சங்க இலக்கியங்களிலோ. பழந்தமிழ் காப்பியங்களிலோ, தொன்ம இலக்கண இலக்கிய நூல்களிலோ என எங்கும் குறிக்கப்பெறாத 'திராவிடம்' எனும் திரிபுவாதச் சொல்லைக் கொண்டு தமிழ் களஞ்சியங்களைக் குறிப்பிடும் திராவிடத்திருட்டுத்தனம் வெட்கக்கேடானது’ எனக் கடுமையாக விமர்சித்திருந்தார்.