Omni Buses: தமிழகம் முழுவதும் விதிகளை மீறிய 102 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.


ஆம்னி பேருந்துகள்:


ஆம்னி பேருந்துகளை பொறுத்தவரை  குளிர்சாதன வசதியில்லா பேருந்துகள், குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகள், இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகள் என மொத்தம் ஆறு வகையான பேருந்துகள் உள்ளன. பேருந்துகளின் தரம் மற்றும் வசதியை பொறுத்து  பயணிகளே ஒவ்வொரு வழித்தடத்திலும் விருப்பப்படி பேருந்துகளை முன்பதிவு செய்கின்றனர். இந்த ஆம்னி பேருந்துகளில் ஒவ்வொரு வழித்தடத்துக்கும் கட்டணம் வேறு விதமாக வசூலிக்கப்படுகிறது. ஆம்னி பேருந்துகளில் வழக்கமான நாட்களை விட பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் விலை மூன்று மடங்கு அதிகமாக இருக்கும். இதனால், பயணிகள் மிகவும் பாதிப்புக்கு ஆளாகின்றனர். 


சென்னையில் இருந்து மற்ற ஊர்களுக்கு செல்லவும், மற்ற ஊர்களில் இருந்தும் சென்னைக்கு வருவதற்கும் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறது. இன்றைய நிலவரப்படி, சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ.1,500 முதல் ரூ.2,000 வரை வசூலிக்கப்படுகிறது. அதுவே சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு ரூ.1,500 முதல் 2,500 வரை வசூலிக்கப்படுகிறது.  இதேபோல, ஒவ்வொரு வழித்தடத்திற்கு வழக்கமான டிக்கெட் விலையை விட மூன்று மடங்கு அதிகமாக வசூலிக்கப்படுகிறது.  கிட்டத்தட்ட இதேபோல தான், சனி மற்றும் ஞாயிறு கிழமைகளிலும் உள்ளது.  ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் விலை தொடர்பாக புகார்களும் எழுந்து வருகின்றன. 


ஆம்னி பேருந்துகளில் சோதனை:


இந்நிலையில், ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு இன்று தொடங்கி செவ்வாய்கிழமை வரை விடுமுறை நாட்களாக உள்ளது. இந்த விடுமுறையை பயன்படுத்தி சொந்த ஊருக்கு செல்வதற்காக ரயில், பேருந்து, ஆம்னி பேருந்துகளில் பொதுமக்கள் செல்கின்றனர். சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர். ஒரே நேரத்தில் லட்ச கணக்கான பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்வதால், அரசுப்பேருந்து மற்றும் ரயில்களில் போதியளவில் டிக்கெட் கிடைக்கவில்லை.  


அதிரடி காட்டிய போக்குவரத்து துறை:


இதனால், பயணிகள் ஆம்னி பேருந்துகளில் செல்கின்றனர். இந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் விலை அதிகமாக வசூலிக்கப்படுவதாக புகார் வந்தது. இதனையடுத்து தமிழக அரசு, விதிகளை மீறும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தது.


இந்நிலையில், விதிகளை மீறி அதிக கட்டணம் வசூலித்து ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுவதாக தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், போக்குவரத்துறை அதிகாரிகள் இன்று காலை முதலே  தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். இதன் அடிப்படையில், தமிழகம் முழுவதும் விதிகளை மீறிய 102 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு, விதிகளை மீறிய ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.27.67 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.15.41 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.