ஓமிக்ரான் தொற்று வேகமாகப் பரவி வருவதால், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைனில் வகுப்புக்களை எடுக்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.


ஓமிக்ரான் வைரஸ்() தொற்று உலகம் முழுவதும் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிவிட்டது. இந்தியாவிலும் ஓமிக்ரான் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் இன்றைய நிலவரப்படி (டிச.27)  578 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக டெல்லியில் (142), மகாராஷ்டிராவில் (141), கேரளாவில் (57), குஜராத்தில் (49), தெலங்கானா (41), தமிழ்நாடு (34), கர்நாடகா (31) மற்றும் ராஜஸ்தானில் (43) பேருக்கு தொற்று உள்ளது.


டெல்லி, உத்தரப்பிரதேசம், அசாம், கர்நாடகா எனப் பல்வேறு மாநிலங்களும் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன.


இந்நிலையில், வரும் 31ஆம் தேதி ஊரடங்கு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தை மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் நடத்தவுள்ளார்.இதில் மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன், மருத்துவ வல்லுநர் குழு ஆகியோர் கலந்துகொள்கின்றனர். கூட்டத்திற்குப் பின் புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.


இதற்கிடையில், ஓமிக்ரான் தொற்று வேகமாகப் பரவி வருவதால், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைனில் வகுப்புக்களை எடுக்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.


இதுகுறித்து சங்கத்தின் தலைவர் டாக்டர் செந்தில், "ஓமிக்ரான் வேகமாகப் பரவக்கூடிய வைரஸாக இருக்கிறது. இதனால் ஆரம்ப கட்டத்திலேயே சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வரவேண்டும். அவ்வாறு செய்தால், தொற்று பாதிப்பு அதிகமாவதைத் தடுக்க முடியும். பள்ளிக் குழந்தைகள் நேரடி வகுப்புக்கு செல்வதால் அதன் மூலம் இவ்வகை வைரஸ் பெற்றோர், வீட்டில் உள்ள இணைநோய் உள்ளவர்களுக்கு பரவ வாய்ப்பு உள்ளது. அதனால் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.




கூட்டத்தைத் தடுக்கலாம்:
அதேபோல், திருமணம், பிறந்த நாள் உள்ளிட்ட பல்வேறு விழா கொண்டாட்டங்கள், இறப்பு நிகழ்ச்சிகளில் கூட்டம் கூடுவதை கட்டுப்படுத்த வேண்டும். பொதுமக்கள் அதிகம் கூடக்கூடிய திரையரங்குகள், வணிக வளாகங்கள், பொழுதுபோக்கு மையங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும். 
ஒரே நேரத்தில் பாதிப்பு அதிகம் ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதை தவிர்க்க இப்போதே ஒருசில கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும்" என்று கூறியுள்ளார்.


ஜனநாயக அரசு மருத்துவர்கள் சங்க மாநில தலைவர் பி.பாலகிருஷ்ணன் கூறுகையில், "இதுவரை உலகம் முழுவதும் 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஓமிக்ரான் வைரஸ் பரவி உள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகள் மூலம் தமிழகத்திற்கு வந்துவிட்டது. இதனைக் கட்டுப்படுத்த உடனடியாக சர்வதேச விமான சேவைக்கு தடை விதிக்க வேண்டும். தடுப்பூசி போடும் பணியை மேலும் தீவிரப்படுத்த வேண்டும். இதுவரையில் தடுப்பூசி போடாதவர்களுக்கு வீடு வீடாகச் சென்று செலுத்த வேண்டும். அரசியல், சமுதாய கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் கொண்டு வர வேணடும்.


வழிபாட்டுத் தலங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் ஏற்கெனவே கொரோனா இரண்டாவது அலையின்போது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். ஏனெனில், ஒமிக்ரான் மற்ற உருமாறிய வைரஸ்களைவிட 5 மடங்கு அதிக வேகத்தில் பரவக்கூடிய தன்மை உள்ளது. இதனால், கடைகள், பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை தீவிரப்படுத்த வேண்டும். மற்றபடி இரவு நேர ஊரடங்கு அவசியமில்லை" என்று அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார்.


எதுவாக இருந்தாலும் வரும் டிச.31ல் தமிழக அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டுவரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


Also Read | Personal Finance Tasks: டிசம்பர் 31க்குள் முடிக்க வேண்டிய பணம் சார்ந்த 4 முக்கிய விஷயங்கள்: மறந்துடாதீங்க!