அரியலூர் மாவட்டம் செந்தூரை நகரில் உள்ள வரதராஜா பெருமாள் கோவிலில் இருந்து திருடப்பட்ட அனுமன் சிலை ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சிலை விரைவில் இந்தியா கொண்டுவரப்பட உள்ளது.
500 ஆண்டு பழமையான அனுமன் சிலை ஒன்று அரியலூரில் உள்ள வரதராஜா கோவில் இருந்துள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு இந்த சிலை திருடப்பட்டுள்ளது. இதனால், வழக்குப்பதிவு செய்த செந்தூரை காவல் துறையினர், காணாமல் போன சிலையை தேடி வந்தனர். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், நியூயார்க்கைச் சேர்ந்த பழமையான பொருள்களை ஏலம்விடும் இணையதளத்தில் அனுமன் சிலையின் புகைப்படம் இருப்பது கண்டறியப்பட்டது.
விளம்பரத்தை பார்த்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு நபர், 37500 அமெரிக்க டாலருக்கு சிலையை வாங்கியுள்ளார். அதனை அடுத்து, சிலைக் கடத்தல் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் திருடப்பட்ட சிலையை தொல்லியல்துறை ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரித்ததில், கடத்தப்பட்ட அனுமன் சிலைதான் ஆஸ்திரேலியாவில் உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டது.
அமெரிக்க, ஆஸ்திரேலிய அரசு அதிகாரிகள் தந்த முழு ஒத்துழைப்பால், ஆஸ்திரேலியா கான்பெரா நாட்டில் உள்ள இந்திய அரசின் உயர் அதிகாரி மன்ப்ரீத் வோஹ்ராவிடம் சிலையை ஒப்படைத்துள்ளனர். மீட்கப்பட்ட அனுமன் சிலை, ஒரு மாதத்தில் தமிழ்நாடு கொண்டுவரப்படும் என சிலைக்கடத்தல் பிரிவு ஏடிஜிபி ஜெயந்த் முரளி தெரிவித்துள்ளார்.
மீட்கப்பட்ட அனுமன் சிலை 500 ஆண்டுகள் பழமையானது எனவும், இந்த சிலை மீட்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் தொடர்பான வேறு முக்கியச் செய்திகள்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்