கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு நகராட்சி, நம்பாளி ஊரைச் சேர்ந்த 34 வயது மாற்றுத்திறனாளி இளைஞர் முகமது ஃபெரோஸ்கான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு 11ஆவது வார்டு உறுப்பினராக வெற்றி வாகை சூடியுள்ளார். பண பலம், அதிகார பலம், உடல் பலம், செல்வாக்கு ஆகிய அனைத்தையும் மீறி 80 சதவீத மாற்றுத்திறனாளியான முகமது புறோஸ்கான், அத்தொகுதியின் கவுன்சிலர் ஆகியுள்ளார். 


11ஆவது வார்டில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுமே தனித்துப் போட்டியிட்ட நிலையில், ஐந்து முனைப் போட்டியில் அவர் பெற்ற வெற்றி பேசுபொருளாகி உள்ளது. இதுகுறித்தும் மாற்றுத்திறனாளிகளின் தேர்தல் பங்களிப்பு பற்றியும் ஏபிபி நாடுவிடம் பேசினார் முகமது புறோஸ்கான்.


உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்... 


''அம்மா, அப்பா, 2 சகோதரர்கள், ஒரு சகோதரி உள்ள குடும்பத்தில் நான்தான் கடைசி. 2 வயதில் ஏற்பட்ட போலியோ தாக்குதலால், இரண்டு கால்களும் செயலிழந்துவிட்டன. கல்விதான் ஒரே ஆயுதம் என்று உணர்ந்து, எம்.காம்., எம்பிஏ படித்து முடித்தேன். டாஸ்மாக் மற்றும் தனியார் வங்கியில் வேலை கிடைத்தது. ஆனாலும் அங்கெல்லாம் பணியாற்ற உடன்பாடு இல்லை என்பதால் சேரவில்லை. 




அரசு உயர்நிலைப் பள்ளியில் கணக்குப் பதிவியல் ஆசிரியராகப் பணியாற்றி வந்தேன். கொரோனாவுக்குப் பிறகு அந்தப் பணியில் இருந்து வெளியேறி, முழு நேர சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறேன். 


அரசியலில் எப்படி ஆர்வம் ஏற்பட்டது?


மார்க்சிஸ்ட் கட்சியின் முஞ்சிறை வட்டாரக் குழு உறுப்பினராகவும், அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்டக் குழு உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறேன்.


பள்ளிக் காலத்தில் இருந்து இந்திய மாணவர் சங்கத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தேன். அரசியலில் தீவிர ஆர்வம் இல்லையென்றாலும் மக்களுக்கு எதாவது செய்ய வேண்டும், தகுதியானவர்களுக்கு அரசின் திட்டங்கள் போய்ச்சேர வேண்டும் என்று நினைத்தேன். 


தகுதியற்றவர்கள் இடைத்தரகர்கள் மூலமாகப் பணத்தைக் கொடுத்து, அரசு நிதி உதவித் திட்டங்களைப் பெறுவதை மாற்ற ஆசைப்பட்டேன். அதன் நீட்சியாகவே தேர்தலில் போட்டியிட்டேன். இந்தத் தொகுதியில் முஸ்லிம்கள் சிறுபான்மை மக்கள்தான். எனினும் அதையும் தாண்டி மார்க்சிஸ்ட் கட்சி, தானாக முன்வந்து எனக்கு சீட் கொடுத்தது. 




தேர்தலில் என்ன மாதிரியான சவால்களை எதிர்கொண்டீர்கள்?


பணம்தான் இந்தத் தேர்தலில் பிரதானமாக விளையாடியது. என் கண் முன்னாலேயே ஆளுங்கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ரொக்கத்தை வாரி இறைத்தன. பல கோடி ரூபாய்க்கு அதிபதியான வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். அனைத்தையும் மீறி நெருக்கடியான சூழலில், வெற்றி பெற்றுள்ளேன்.


ஆனால் இத்தனை மாற்றுத்திறன்களுடன் முகமது புறோஸ்கான் சமூக சேவை செய்கிறார், நம் பிரச்சினைகளைச் சரிசெய்வார். அதிகாரிகளுடன் அனுசரித்துப் போகமாட்டார் என்று பெரும்பாலான மக்கள் நினைத்து வாக்களித்தனர். 


மாற்றுத்திறனாளிகள் அரசியலுக்கு வருவதன் அவசியம் என்ன?


இதை அவசியம், அநாவசியம் என்று நான் பார்க்கவில்லை. மாற்றுத் திறனாளிகள் என்று யாரும் அவர்களை ஒதுக்கி வைக்காமல் இருந்தால் போதும். பிரச்சாரத்துக்குப் போகும்போது, 'நொண்டி' என்று என் காதுபடவே சிலர் பேசினர். 'இவர்கள் வீட்டில் கிடக்காமல் இங்கே என்ன செய்கின்றனர்?' என்று கேலி பேசினர்.


'தொகுதியில் எதாவது ஒரு பிரச்சினை என்றால், உடனடியாக எப்படி வருவீர்கள்?' 'உங்களுக்கு எப்படி வாக்களிக்க முடியும்?' என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டன. அதையும் தாண்டித்தான் அரசியல் செய்கிறோம். 


மாற்றுத் திறனாளிகளும் சமூகத்தின் ஓர் அங்கம்தான். பிற துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு உள்ள நிலையில், தேர்தலிலும் எங்களுக்கு இட ஒதுக்கீடு அவசியம். எல்லாத் தேர்தல்களிலும் பெண்களுக்கு ஒதுக்கீடு உள்ள நிலையில், மாற்றுத் திறனாளிகளுக்கும் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். இதுகுறித்த விவாதங்கள் எழுப்பப்பட வேண்டும். 




எதிர்காலத் திட்டங்கள் எதாவது வைத்திருக்கிறீர்களா?


தொகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் சரியான எடையில், முறையான தரத்தில் மக்களுக்கு அரிசியைப் பெற்றுக் கொடுப்பேன். தகுதியானவர்களுக்கு மட்டுமே ஓய்வூதியத் தொகை, நிதித் திட்டங்களை கிடைக்கச் செய்வேன். சீரான சாலை, மின் விளக்கு, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வசதி ஆகியவற்றைப் பெற்றுக் கொடுப்பேன். அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாமல் இவற்றைச் செய்ய முடியாது என்று உணர்ந்துள்ளேன். மக்கள் கொடுத்தும், அதிகாரிகள் பெற்றும் பழகிவிட்டனர். எனினும் அதை நிச்சயம் மாற்றி அமைப்பேன். 


என்னால் செய்ய முடியுமா என்று மக்கள் பார்க்கும் சந்தேகப் பார்வை போய், என்னாலும் சிறப்பாகச் செய்ய முடியும் என்பதை மக்கள் உணரும்படி செய்ய வேண்டும். நான் சாதித்து, என்னைப் போன்ற மாற்றுத்திறனாளி சகோதரர்களை வெளியே கொண்டுவர வேண்டும். அதுதான் என்னுடைய ஆசை'' என்று நம்பாளி கவுன்சிலர் முகமது புறோஸ்கான் தெரிவித்தார்.


முகமது ஃபெரோஸ்கானைப் போலவே, இன்னும் அடுத்தடுத்த உயரம் தொட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கான முன்னுதாரணர்கள் ஆகட்டும்.