மூன்றாம் வகுப்புக்கு மேல் படிக்காத காமராஜர் கல்விக்கண் திறந்த காமராஜராக நம் மனங்களில் இன்றும் நிலைத்து நிற்கிறார். எளிமையின் இலக்கணமாக திகழ்ந்த காமராஜர் கல்வியில் அவர் செய்த புரட்சிக்காக கல்விக்கண் திறந்த காமராஜர் என்று எல்லோராலும் புகழப்படுகிறார். இன்று அக்டோபர் 2 அவருடைய நினைவு நாள். இந்த நாளில் அவருடைய வாழ்க்கைப் பயணத்தில் சில முக்கிய நிகழ்ச்சிகளை நினைவுகூர்வோம்.
லைட்டுக்கு உபயதாரர் தெரியுது.. ஆனா?
கர்மவீரர் காமராஜர் ஒரு முறை, தஞ்சை மாவட்டத்தில் இருந்த பழைமையான கோயில் ஒன்றைப் பார்வையிடச் சென்றார். சிதிலம் அடைந்திருந்தாலும் புராதனமான அந்தக் கோயிலின் கட்டுமானம் அவரை வியக்க வைத்தது. ஓர் இடத்தில் நின்றவர், “இந்தக் கோயிலைக் கட்டுனது யாரு?” எனக் கேட்டார். உடன் வந்த அதிகாரிகளுக்கு அதுபற்றி தெரியவில்லை. பதில் சொல்லத் தெரியாமல் விழித்தனர். உடனே, சிரித்துக் கொண்டே மேலே இருந்த டியூப் லைட்டை சுட்டிக்காட்டிய காமராஜர், “இவ்வளவு காலம் நிலைச்சு நிக்கிற இந்தக் கோயிலைக் கட்டியவர் யாருன்னு தெரியலே…ஆனா, ஒரு மாதம்கூட ஒழுங்கா எரியாத இந்த டியூப் லைட்ல உபயதாரர் யாருன்னு எவ்வளவு பெரிசா எழுதி வெச்சிருக்காங்கன்னு பாருங்களேன்” என்று கூற… உடன் வந்தவர்கள் வாய்விட்டுச் சிரித்தார்களாம். எளிமையின் அடையாளமான காமராஜர் இவ்வாறாக நகைச்சுவை உணர்வும் கொண்டவர் என்பதற்கு இச்சம்பவம் ஒரு சாட்சி.
படிக்காதவனுக்கு மாலையா?
ஒரு முறை பயணியர் விடுதியில் தங்கியிருந்தார். அப்பொழுது காங்கிரஸ் தொண்டர்களும் அவர் மீது அன்பு கொண்ட பொதுமக்களும் மாலையணிவித்து மரியாதை செலுத்த வந்திருந்தனர். வந்திருந்தவர்களில் ஒரு ஆசிரியர் பொதுமக்களின் இடையில் வந்தார். அந்த ஆசிரியரைப் பார்த்த காமராஜர், “என்னய்யா! படிக்காதவங்களுக்குப் போய் பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டிய நீங்கள் படிக்காதவனுக்கு மாலை போட வந்திருக்கிறீர்களே?” என்றார். இதைக் கேட்டதும் அந்த ஆசிரியரின் கண்களில் கண்ணீர் மல்கியது என்று வரலாற்றுப் பக்கங்களில் தகவல் இருக்கிறது.
சிக்கணமும் சிறந்ததே
பெருந்தலைவர் காமராஜர் முதல்-அமைச்சராக இருந்தபோது, தனது தாயார் சிவகாமி அம்மையாரின் செலவுக்காக மாதம்தோறும் 120 ரூபாய் அனுப்பிக் கொண்டிருந்தார். முதல்வரின் தாயார் என்பதால், விருதுநகரில் வசித்து வந்த சிவகாமி அம்மையாரைப் பார்க்க தினமும் வெளியூர்களில் இருந்து கட்சி சார்ந்தவர்கள், கட்சி சாராதவர்கள், உறவினர்கள் என்று பலரும் வந்து செல்வார்கள். காமராஜர் மாதம்தோறும் அனுப்பிய 120 ரூபாய் கட்டுப்படியாகவில்லை. தன்னை வீடு தேடி பார்க்க வந்தவர்களுக்கு சோடா, கலர் என்று அவர் வாங்கிக் கொடுப்பதிலேயே அந்த பணத்தின் பெரும் பகுதி செலவானது. அதனால், தனக்கு மேலும் 30 ரூபாய் சேர்த்து 150 ரூபாயாக மாதம்தோறும் அனுப்பி வைக்குமாறு காமராஜருக்கு தகவல் அனுப்பினார். ஆனால், காமராஜர் “யார் யாரோ வீட்டுக்கு வருவார்கள் என்பது உண்மையாக இருக்கலாம். வந்தவர்கள் எல்லாம் எனக்கு சோடா வேண்டும், கலர் வேண்டும் என்றா கேட்கிறார்கள்? அவர்களுக்கு ஒன்றும் கொடுக்காமலேயே 120 ரூபாயை வைத்து செலவு செய்யலாமே… ஒருவேளை, அம்மா கேட்டபடி கூடுதலாக 30 ரூபாய் அனுப்பினால், அவரது கையில் கொஞ்சம் காசு சேர்ந்துவிடும். கோவில், குளம் என்று கிளம்பிவிடுவார். அது அவரது உடல்நிலைக்கு ஆகாது. அதனால், இப்போது கொடுத்து வரும் 120 ரூபாயே போதும்” என்று ஒரேயடியாக சொல்லிவிட்டார் காமராஜர். குடும்பங்களில் சில நேரங்களில் கடுமையான சிக்கணம் ஏன் அவசியம் என்பதை உணர்த்தியவர் காமராஜர்.
எனக்கு எல்லாமே முக்கியம் தான்.
முதல்வராக பொறுப்பேற்ற முதல் நாளில் கோப்புக்களை பார்க்க அமருகிறார் காமராஜர். அவருக்கு முன்னால் கோப்புகள் இரண்டு வரிசையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. ‘ இது என்ன வரிசை?’ என அவர் கேட்க நேர்முக உதவியாளர் ‘முதல் வரிசையில் உள்ளவை முக்கியமானவை என்றும், இரண்டாவது வரிசையில் உள்ளவை முக்கியம் இல்லாதவை’ என்றும் கூறுகிறார். இதனைக் கேட்டு அதிர்ந்து போன காமராஜர் ‘முதல்வருக்கு வரும் கோப்புகளில் முக்கியம் இல்லாதவையும் உண்டா என்ன?’ எனக்கு வரும் ஒவ்வொரு கோப்பும் முக்கியமானதுதான். அவற்றை நான் உடனுக் குடன் பார்த்து அனுப்ப வேண்டும் அதுதான் முக்கியம் என்றாராம். மக்களை முதன்மையாக வைத்துச் செயல்பட்டு வழிகாட்டும் முதல்வராக இருந்தவர் காமராஜர் என்றால் அது மிகையாகாது.
மக்கள் சாட்சியே மக்கள் ஆட்சி
அவரைப் பார்க்க ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வரும்போது அவர் தன் உதவியாளர்களை அழைப்பார். தெருவில் போகிற முடிவெட்டு கிறவர், துணிவெளுக்கிறவர் என மிகச் சாதாரண வாழ்க்கை நடத்தும் ஏழைகளைக் கூப்பிடச் சொல்லுவார். அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் முன்பாகவே அந்த ஏழைகளையெல்லாம் நலம் விசாரிப்பார். “என்ன…… உங்களுக்கெல்லாம் அரிசி பருப்பெல்லாம் ஒழுங்கா கிடைக்குதா? விலைவாசி நிலையெல்லாம் எப்படி இருக்கு? உங்களுக்கெல்லாம் என்ன பிரச்சனை இருக்குது?” என்றெல்லாம் கேட்டு அவர்கள் என்ன சொல்லு கிறார்கள் என்று உன்னிப்பாக கவனிப்பார்.
குலக்கல்வியை ஒழித்தவர்:
கல்விக்காக அவர் எவ்வளவோ விஷயங்களை செய்திருந்தாலும் அவர் செய்ததில் முக்கியமானது குலக்கல்வித் திட்டத்தை ஒழித்தது. இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே சென்னை மாகாணத்தின் முதலமைச்சராகிவிட்டார் காங்கிரஸ்காரரான ராஜாஜி. ராஜாஜி முதலமைச்சரானபோது தமிழ்நாட்டில் பள்ளிப்படிப்பை படித்துக்கொண்டிருந்தவர்கள் எண்ணிக்கை வெகு சொற்பம். 100க்கு 5 பேர் படித்தாலே பெரிது என்ற நிலை. பெண்கள் ஒருநாளைக்கு 3 மணி நேரம் படித்தாலே போதும் என்று உத்தரவிட்டிருந்தார். 1952ல் சென்னை மாகாணத்தின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றிருந்த ராஜாஜி அதிக செலவில்லாமல் குழந்தைகளுக்குப் பள்ளிக் கல்வி அளிக்க புதிய திட்டம் ஒன்றைக் கொண்டு வந்தார். அது தான் குலக்கல்வித்திட்டம்.
5 மணி நேரமாக இருந்த பள்ளி வேலை நேரம் இரு நேர முறைகளாக மாற்றப்பட்டு, முதல் நேரமுறையில் மாணவர்கள் பள்ளியில் ஆசிரியரிடம் பாடம் கற்க வேண்டும் என்றும், இரண்டாவது நேர முறையில் வீட்டில் தந்தையிடமிருந்து அவர்களுடைய தொழிலைக் கற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. மாணவிகள் தாயாரிடமிருந்து சமையலையும், வீட்டு வேலைகளையும் கற்பர். இத்தகு தொழில்கள் இல்லாத பெற்றோரை உடைய மாணவர்கள் வேறொரு தொழில் செய்பவர்களுடன் சேர்ந்து தொழில் கற்பர். இதுதவிர அந்த நேர முறையில் ஊர் பொதுப் பணிகள் சார்ந்த சாலைகளைச் சீரமைத்தல், துய்மைப்படுத்துதல், கட்டிடங்கள் கட்டுதல் போன்ற வேலைகளில் ஈடுபடுத்தப்படுவர் இது தான் குலக்கல்வியின் சாராம்சம்.
இந்த திட்டம் அப்போது திராவிட இயக்கத்தினரை கிளர்ந்தெழச்செய்தது. பெரியார், அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட பலரும் கடுமையாக எதிர்த்தனர். போராட்டங்களை அறிவித்தார் பெரியார். இதையெல்லாம் விட ராஜாஜிக்கு சர்ப்ரைஸ் கொடுத்தது காமராஜர் தான். ராஜாஜியும், காமராஜரும் காங்கிரஸ் கட்சியில் இருந்த நிலையில் உள்ளிருந்தே கடுமையாக எதிர்த்தார் காமராஜர். பைத்தியக்காரத் தனமான திட்டம் என்று கூறினார். நிலைமை பெரிதாகவே காமராஜரையும், ராஜாஜியையும் அழைத்து பேசினார் பிரதமர் நேரு. ஆனாலும், பிரச்சனை சரியாகவில்லை. ராஜாஜி மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. இதனை அறிந்த ராஜாஜி, "நான் கொண்டு வந்த கல்வித் திட்டத்தின் மீது ஓட்டெடுப்பு நடத்தி என்னை அவமானப்படுத்த வேண்டாம். நானே விலகிக் கொள்கிறேன்" எனக் கூறியவர் 1954 ல் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.