மருத்துவ மாணவர் சேர்க்கையை தமிழ்நாடு அரசே எடுத்து நடத்த வேண்டும், மத்திய அரசின் மருத்துவக்குழு நடத்தும் என்ற அறிக்கையை திரும்ப பெற வேண்டும் என ஓ பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பான அறிக்கையில், "நடப்பாண்டிற்கான கலந்தாய்வு குறித்து தேசிய மருத்துவ ஆணையம் (National Medical Commission) 02-06-2023 நாளிட்ட அறிவிக்கை எண் 367–ஐ மத்திய அரசிதழில் வெளியிட்டுள்ளது. இதில், 2023 ஆம் ஆண்டு மருத்துவப் பட்டப் படிப்பு ஒழுங்குமுறை நெறிகள் (Graduate Medical Educatian Regulations, 2023) என்ற பெயரில் ஒழுங்குமுறை நெறிகள் வகுக்கப்பட்டுள்ளன. இதில் மூன்றாவது அத்தியாயம்-III, பிரிவு 12-ல், இந்தியாவிலுள்ள அனைத்து மருத்துவக் கல்வி நிலையங்களிலும், நீட் மதிப்பெண் அடிப்படையில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான பொதுக் கலந்தாய்வு நடத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பிரிவு 14-ல், பொதுக் கலந்தாய்வு குறித்து இளநிலை மருத்துவக் கல்வி வாரியம் (Under Graduate Medical Education Board) நெறிமுறைகளை (Guidelines) வெளியிடும் என்றும், பிரிவு 15-ல், அனைத்து இளநிலை மருத்துவப் படிப்பிற்கான இருக்கைகளை எந்த முகமையின் மூலம் எந்த முறையில் கலந்தாய்வு நடத்துவது என்பதை மத்திய அரசு முடிவு செய்யும் என்றும், பிரிவு 16-ல், இந்த நெறிமுறைகளுக்கு முரணாக எந்த மருத்துவக் கல்வி நிலையமும் மாணவர்களை சேர்க்கக்கூடாது என்றும், மருத்துவக் கல்வி நிலையங்கள் தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டி நெறிமுறைகளில் உள்ள குறைந்தபட்ச தரத் தேவையை பின்பற்ற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயத்தில், மாநில அரசுகள் பின்பற்றி வரும் இடஒதுக்கீடு குறித்து இந்த அறிவிக்கையில் ஏதும் இடம்பெறாதது அதிர்ச்சி அளிக்கிறது.
தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவிக்கையினைப் பார்க்கும்போது, அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் உள்ள மருத்துவ இருக்கைகள் அனைத்தும் மத்திய அரசின் தேர்வுக் குழுவால் நிரப்பப்படும் என்பது தெளிவாகிறது. இந்த அறிவிப்பால், தமிழ்நாட்டில் உள் ஒதுக்கீடு பெறும் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்கள் கூறியிருக்கிறார். இட ஒதுக்கீடே பறிபோகுமோ என்ற அச்சம் அனைவன் மத்தியிலும் நிலவுகிறது. மேலும், இந்த ஆண்டு மருத்துவ படிப்புகளுக்கு பொது கவுன்சிலிங் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தெரிவித்து இருக்கிறார். எந்த ஆண்டும் இல்லை என்ற நிலைமையை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பு.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் மாநில அரசின் நிதியிலிருந்து கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. எனவே, மாநிலத்திற்குட்பட்ட மருத்துவ இருக்கைகளை மாநில அரசு நிரப்புவது என்பதுதான் பொருத்தமுடைய ஒன்று. அப்பொழுதுதான் மாநிலத்தில் கடைபிடிக்கப்பட்டு வரும் இட ஒதுக்கீடு, உள் ஒதுக்கீடு ஆகியவை காப்பாற்றப்படும். மேலும், மாநிலத்திற்குட்பட்ட மருத்துவ இருக்கைகள் தமிழ்நாட்டு மாணவ, மாணவியருக்குத்தான் கிடைக்கிறதா என்பதும் உறுதிப்படுத்தப்படும். இது மட்டுமல்லாமல், காலங்காலமாக மாநில அரசால் மேற்கொள்ளப்பட்டு வந்த கலந்தாய்வினை மாற்றுவது என்பது மாநிலத்தின் உரிமையை பறிப்பதற்கு சமம். இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
எனவே, பொதுக் கலந்தாய்வினை மத்திய மருத்துவக் குழு நடத்தும் என்ற அறிவிப்பாணையை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும், இதற்குத் தேவையான அழுத்தத்தை தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு கொடுத்து மாநிலத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டுபென்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.