தென்மேற்கு பருவ மழை, மேற்கு திசை காற்றில் மாறுபாடு மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இருப்பினும் வெயிலின் தாக்கமும் அதிகரித்துள்ளது. வழக்கமாக மே மாதம் தான் வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருக்கும் இந்த ஆண்டு மே மாதம் தொடங்கியதிலிருந்து மழை பெய்து வந்ததால் வெயில் எதிர்ப்பார்த்ததை விட குறைந்து இருந்தது. ஆனால் மே மாதம் இறுதியிலிருந்து தற்போது வரை வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் கடந்தே உள்ளது.  


அதிகபட்ச வெப்பநிலை :  13.06.2023: தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்; ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 – 4  டிகிரி செல்சியஸ்  அதிகமாக இருக்கக்கூடும்.  அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது  வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  


கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சென்னையில் 40.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனை தொடர்ந்து வேலூரில் – 40.3 டிகிரி செல்சியஸ், திருத்தணியில் – 40.2 டிகிரி செல்சியஸ், பரங்கிப்பேட்டை – 40.2 டிகிரி செல்சியஸ், ஈரோடு – 40.2 டிகிரி செல்சியஸ், கரூர் பரமத்தி – 39.5 டிகிரி செல்சியஸ், கடலூரில்  - 39.8 டிகிரி செல்சியஸ், மதுரையில் – 39.7 டிகிரி செல்சியஸ், திருச்சியில் – 39.5 டிகிரி செல்சியஸ், திருப்பத்தூர் – 38.8 டிகிரி செல்சியஸ், சேலம் – 38.3 டிகிரி செல்சியஸ், நாகை – 38.7 டிகிரி செல்சியஸ், பாளையங்கோட்டை – 38.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.


 சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: 


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 இந்நிலையில் சென்னை மீனம்பாக்கத்தில் – 40.6 டிகிரி செல்சியஸும், நுங்கமபாக்கத்தில் – 39.9 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது. பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் கொடுமையாக இருக்கும் நிலையில் மாலை நேரங்களில் நகரில் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நேற்று மாலை மடிப்பாக்கம், கிண்டி, ஆலந்தூர், சைதாப்பேட்டை, அடையாறு, எம்.ஆர்.சி நகர், ராஜா அண்ணாமலைபுரம் ஆகிய பகுதிகளில் மழை பெய்தது. கடந்த 24 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் 100 டிகிர் பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவானது.