Just In





100 நாள் வேலை கேட்டு வந்த சீமானின் தாய்; இளையான்குடியில் பரபரப்பு
100 நாள் வேலை அளிக்க வேண்டும் என்றுகூறி அரணையூர் கிராம மக்கள், இளையான்குடி ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு ஒன்றாக வந்தனர்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தாய் அன்னம்மாள் 100 நாள் வேலை கேட்டு, இளையான்குடி ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு வந்த காட்சி, இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் இளையான்குடி உள்ளது. இதற்கு அருகில் உள்ள அரணையூர் கிராம மக்களுக்கு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் 100 நாள் பணி வழங்கப்பட்டு வந்தது. எனினும் கடந்த சில மாதங்களாக 100 நாள் வேலை அரணையூர் கிராம மக்களுக்கு வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
மீண்டும் 100 நாள் வேலை அளிக்க வேண்டும்
இதனால் தங்களுக்கு மீண்டும் 100 நாள் வேலை அளிக்க வேண்டும் என்றுகூறி அரணையூர் கிராம மக்கள், இளையான்குடி ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு ஒன்றாக வந்தனர். அங்குள்ள வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தங்களுக்கு வேலை வழங்கக் கோரி மனு அளித்தனர். அப்போது அவர்களுடன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தாய் அன்னம்மாளும் உடன் வந்திருந்தார்.
வட்டார வளர்ச்சி அலுவலர், அரசின் ஒப்புதல் பெற்று 100 நாள் பணி வழங்கப்படும் என்று உறுதி அளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
பொலிரோ காரில் ஏறிச் சென்ற சீமான் தாய் அன்னம்மாள்
தொடர்ந்து சீமான் தாய் அன்னம்மாளும் கலைந்து சென்றார். தொடர்ந்து அவர், நாம் தமிழர் கட்சியின் சின்னம் பொறித்த பொலிரோ காரில் ஏறிச் சென்றார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.