CM Stalin Secretary: முதலமைச்சர் ஸ்டாலினின் செயலாளர்களில் ஒருவரான அனு ஜார்ஜ், 136 நாட்கள் விடுப்பில் செல்வதற்கான அரசாணை அண்மையில் வெளியானது.


நீண்ட விடுப்பில் முதலமைச்சரின் செயலாளர்:


முதலமைச்சர் ஸ்டாலினின் மூன்றாவது செயலாளராக அனு ஜார்ஜ் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், அவர் நீண்ட விடுப்பில் செல்வதற்கான அரசாணை அண்மையில் வெளியானது. அதன்படி, தனது குழந்தையின் படிப்பிற்காக 136 நாட்கள் தொடர் விடுப்பில் சென்றுள்ளார். இதையடுத்து இதுநாள்வரை அவர் வகித்து வந்த பொறுப்புகள், முதலமைச்சரின் மற்ற 2 செயலாளர்கள் மற்றும் ஒரு இணை செயலாளருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.



தலைமைச் செயலக முடிவு?


இதனிடயே, அனு ஜார்ஜ் நீண்ட விடுப்பு முடிந்து மீண்டும் பணிக்கு திரும்பும்போது, அவரை மீண்டும் முதலமைச்சரின் செயலாளராகவே நியமிக்க தலைமை செயலகம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாகவே அவரது இடத்திற்கு வேறு யாரும் நியமிக்கப்படாமல், பொறுப்புகள் ஏற்கனவே இருக்கும் செயலாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


மாறாத அனு ஜார்ஜின் பதவி


தமிழ்நாடு முதலமைச்சராக பதவி ஏற்றதும் தனக்கென்று தனி செயலாளர்களாக, 4 பேரை ஸ்டாலின் நியமனம் செய்தார். தமிழக அரசின் 45 துறைகளும் இந்த 4 அதிகாரிகளுக்கும் பிரித்து தரப்பட்டது. அவர்களில் ஒருவரான அனு ஜார்ஜிற்கு 12 துறைகள் ஒதுக்கப்பட்டன. கடந்த வருட தொடக்கத்திலும் அனு ஜார்ஜ் 3 மாதங்கள் நீண்ட விடுப்பில் சென்றார்.  அது முடிந்து மீண்டும் திரும்பும்போதும் முதலமைச்சரின் செயலாளராகவே பணியை தொடங்கினார். அதே பாணியில் தான் இந்த முறை விடுப்பு முடிந்து மீண்டும் பணிக்கும் திரும்பும்போதும், அவர் ஏற்கனவே கவனித்து வந்த 12 துறைகளும் மீண்டும் அனு ஜார்ஜிற்கு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. 


யார் இந்த அனு ஜார்ஜ்?


ஜெயலலிதாவின் குட்புக்கில் இருந்த அனு ஜார்ஜ், திமுக ஆட்சியில் முதலமைச்சரின் தனிச் செயலாளராக நியமிக்கப்படுவதற்கு முன்பு தொழில்துறை ஆணையராக இருந்தவர். அரியலூரில் கடந்த 2011 முதல் 2012 வரை மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றினார். அந்த காலகட்டத்தில் பெண் சிசுக்கொலை, குழந்தைத் திருமணங்களை தடுக்க அவர் எடுத்த தீவிர நடவடிக்கைகள் நல்ல பலன் அளித்தன. குழந்தைத் திருமணங்களைத் தடுத்த கையோடு பெண் பிள்ளைகளை அழைத்து, அவர்களுக்காகச் சிறப்பு தங்கும் இடங்களை ஏற்படுத்தி, படிக்க ஏற்பாடுகள் செய்து மக்கள் மனதில் இடம்பிடித்தார். மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு வித்திட்டு, 10 ஆண்டுகள் ஆகியும் இன்று வரையிலும் அரியலூரில் அனு ஜார்ஜின் பெயர் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது.


திட்டமிடுவதில் திறம்பட செயல்படக்கூடிய அனு ஜார்ஜ், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் இறுதி காரியத்துக்கான பணிகளை, அமுதா ஐ.ஏ.எஸ்-ஸுடன் சேர்ந்து கவனித்துக் கொண்டார். அவர்களின் செயல்பாடு அனைவரையும் ஈர்த்ததால் அனு ஜார்ஜ், தொடர்ந்து ஸ்டாலினின் செயலாளராக இயங்கி வருகிறார்.