உயர்கல்விக்கான உதவித்தொகை வழங்கி ஊக்கப்படுத்தும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் 3 இடம் பிடித்த மாணவ, மாணவியர்களை கௌரவிக்கும் வகையில் பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கியுள்ளார். இன்று சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா திருமண மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் திண்டுக்கல், சிவகங்கை, ஈரோடு, தேனி, தர்மபுரி, கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி,சேலம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை, அரியலூர், கோயம்புத்தூர், இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் தங்கள் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில், ”கல்வி என்பது மானுட உரிமை! அதைக் கொடுக்க மறுப்பது மாபெரும் கொடுமை; கல்வியை அனைவருக்கும் தரமாக, சரியாக, சமமாக வழங்க வேண்டியது ஒரு நல்ல அரசின் தலையாயக் கடமை! ஆனால், தற்காலச்சூழலில் கல்வி என்பது தனியார் மயமாக்கப்பட்டு, மதிப்புக்கூட்டப்பட்ட விற்பனை பண்டம்போல, கல்விக் கட்டணம் என்ற பெயரில் பெரும் பகற்கொள்ளை நடக்கின்றது; ‘பணம் படைத்தவர்களால் மட்டுமே தரமான கல்வியைப் பெற முடியும், ஏழைகளுக்கு நல்ல கல்வி என்பது எட்டாக்கனி’ எனும் ஏற்றத்தாழ்வு மிகுந்த சமகாலத்தில், ஏழை - பணக்காரர் என்ற எவ்வித பாகுபாடுமின்றி, தமிழ்நாடு முழுவதும் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவ - மாணவியரை அழைத்து, பாராட்டுச்சான்றிதழுடன், உயர்கல்விக்கான உதவித்தொகையும் வழங்கி ஊக்கப்படுத்துகின்ற உன்னதப்பணியைச் செய்யும், என்னுயிர் இளவல், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர், என் அன்புத்தளபதி விஜய் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!” என தெரிவித்துள்ளார்.