10 மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவிகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பாராட்டு விழா நடக்கிறது. இதில் பங்கேற்கும் மாணவிகள் அக்கட்சியின் தலைவரான நடிகர் விஜய்யை காண்பதில் நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா திருமண மண்டபத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் 3 மதிப்பெண்கள் பெற்ற தொகுதி வாரியாக உள்ள மாணவ, மாணவியர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பாராட்டு விழா நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் த.வெ.க. தலைவரும்,நடிகருமான விஜய் அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ், மரக்கன்று, ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்குகிறார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க முதற்கட்டமாக 21 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் வருகை தந்துள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவி திவ்ய நாராயிணி தெரிவிக்கையில், “நான் 10ஆம் வகுப்பில் 494 மதிப்பெண் பெற்றுள்ளேன். கடந்தாண்டு விஜய் மாணவ, மாணவியர்களை பாராட்டியதில் அதிகம் ஈர்க்கப்பட்டேன். அதனை முன்னுதாரணமாக கொண்டு படித்தேன். இப்ப விஜய் கையால் விருது வாங்கப்போகிறேன். ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. வாழ்க்கையில் மறக்க முடியாத தருணமாக மாறியுள்ளது. நான் விஜய்யின் மிகத்தீவிரமான ரசிகை. ஒரு படம் கூட விடாமல் பார்ப்பேன். நான் ஓட்டு போட்டால் கூட விஜய்க்கு தான்” என தெரிவித்தார்.
தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கடலையூரை சேர்ந்த வாணி என்ற மாணவி பேசுகையில், “10 ஆம் வகுப்பில் 494 மதிப்பெண் எடுத்துள்ளேன். நான் இப்படி தருணம் அமையும் என நினைக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் என்ற மாணவனின் அம்மா கூறுகையில், “ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. வாழ்க்கையின் சிறந்த தருணமாக அமைந்துள்ளது. விஜய் விருது கொடுப்பது மகிழ்ச்சியாக உள்ளது. ஏற்பாடுகள் எல்லாம் சிறப்பாக உள்ளது. நான் விஜய்யை நடிகராகவும், அரசியல்வாதியாகவும் பிடித்திருக்கிறது. 2026ல் அவருக்கு ஒரு வாய்ப்பு என்பது இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.
இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயலைச் சேர்ந்த மாணவி வினோதினியின் சகோதரி பேசுகையில், “என்னுடைய சகோதரி விஜய்யிடம் பரிசு வாங்குவது சந்தோசமாக உள்ளது. அவரை தான் அடுத்த முதலமைச்சராக பார்க்கிறோம்” என தெரிவித்தார்.