நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு 2வது சம்மன் அனுப்பட்டுள்ளது. 


பிரபல நடிகையான விஜயலட்சுமி கடந்த சில ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டார் என குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார். 


இதையும் படிக்க: "ராஜேந்திர பிரசாத்துக்கு கிளார்க் வேலை பார்த்தவர் அம்பேத்கர்" - விஷ்வ இந்து பரிஷத் இயக்க முன்னாள் தலைவர் மணியன் கைது


சீமான் மீது குற்றஞ்சாட்டி வரும் நடிகை விஜயலட்சுமி:


கடந்த 2008ஆம் ஆண்டு, மதுரையில் சீமான் தன்னை  திருமணம் செய்து கொண்டதாகவும் 3 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு பின் சீமான் ஏமாற்றிவிட்டதாகவும் நடிகை விஜயலட்சுமி குற்றஞ்சாட்டி வருகிறார். கடந்த 2011 ஆம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி, சீமான் மீது சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 


அந்த சமயத்தில், சீமான், விஜயலட்சுமி ஆகிய இரண்டு தரப்பும் சமாதானமான நிலையில், தான் அளித்த புகாரை விஜயலட்சுமி திரும்பப் பெற்றார். இருப்பினும், வீடியோ பதிவுகள் மூலம் சீமான் மீது பல்வேறு புகார்களை கூறி வந்தார் விஜயலட்சுமி. சென்னையில் தங்கி இருந்த போது விஜயலட்சுமி தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 


இப்படிப்பட்ட சூழலில், கடந்த மாதம் இறுதியில் மீண்டும் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சீமான் மீது விஜயலட்சுமி புகார் அளித்தார். சீமான் மீது கொடுத்த புகாரின் அடிப்படையில் நடிகர் விஜயலட்சுமி திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தின் நடுவர் பவித்ரா முன்பாக ஆஜராகி இரண்டரை மணி நேரம் மேலாக 8 பக்கங்கள் அளவில் வாக்குமூலம் அளித்தார். 


சம்மன் காரணமாக நெருக்கடியில் சீமான்:


அப்போது சீமான் 7 முறை கட்டாய கருக்கலைப்பு செய்தார் எனவும் விஜயலட்சுமி குற்றம்சாட்டினார். இதனால் விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இதனையடுத்து விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சென்னை வளசரவாக்கம் காவல்துறை, சீமானுக்கு  முதல் சம்மன் அனுப்பினர்.


அப்போது, தனக்கு கட்சிப் பணிகள் அதிகமாக இருப்பதாகவும் ஆஜராக நேரம் இல்லை என கூறியிருந்தார். பின்னர், சீமான் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி, அவர் கொடுத்த கடிதங்களை வழங்கினர். இந்த நிலையில், இன்று சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டுக்கு 2ஆவது முறையாக சம்மன் அனுப்பப்பட்டது.


ஆனால், அந்த சம்மனை சீமான் தரப்பில் ஏற்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியானது. இச்சூழலில், வழக்கறிஞர் மூலம் சம்மனை சீமான் தரப்பு பெற்று கொண்டதாக கூறப்படுகிறது.


இதையும் படிக்க: Arts College UG Admission: மிஸ் பண்ணிடாதீங்க மாணவர்களே... அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர இன்றே கடைசி!