ஞாயிற்றுக்கிழமை என்பதால் காஞ்சிபுரத்தில் இறைச்சி கடைகளை பொதுமக்கள் தேடிய நிலையில், காவல்துறை, வருவாய் துறை அதிகாரிகளின் கெடுபிடிகளால் இறைச்சி கடைகள் திறக்கப்படாததால் ஏமாற்றமடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு மாத காலமாக கொரோனா வைரஸ்தொற்று பரவும் வேகம் அதிகரித்து வந்தன. இதன் எதிரொலியாக கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மற்றும் கடந்த ஒரு வார காலமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது . அதேபோல் வருகின்ற ஜூன் ஏழாம் தேதி வரை மீண்டும் மற்றொரு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த காலங்களில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கின்போது அத்தியாவசிய கடைகள் , மளிகை கடைகள் உள்ளிட்ட கடைகள் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் இம்முறை கொரோனா வைரஸ் தொற்று பரவும் வேகம் அதிகரித்து இருப்பதால், இம்முறை அவற்றுக்கு அனுமதி அளிக்கப்படாமல் மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக தள்ளு வண்டிகளில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினங்களில் இறைச்சி,மீன், முட்டை, உள்ளிட்டவைகளை வாங்கி சமைத்து உண்டு மகிழ்வது அசைவப் பிரியர்களின் வழக்கம். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அன்று காஞ்சிபுரம் நகரப் பகுதிகளில் முழு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி ஏராளமான அசைவப் பிரியர்கள் இறைச்சி மற்றும் மீன் கடைகளை தேடி அலைந்தனர். காஞ்சிபுரம் ரயில் நிலையம் மீன் சந்தை, பெரிய காஞ்சிபுரம் தர்கா பகுதி இறைச்சிக் கடைகள் காவல்துறையினர், வருவாய்த் துறை, பெருநகராட்சி, அலுவலர்களின் கெடுபிடிகளால் அனைத்து கடைகளும் முழுவதுமாக அடைக்கப்பட்டிருந்தது. இருந்தும் பொதுமக்கள் எப்படியாவது இறைச்சி அல்லது மீன்களை வாங்கி விட வேண்டும் என்ற நோக்குடன் பல்வேறு பகுதிகளுக்கு சென்று முயற்சி செய்தனர். ஆனாலும் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டு இருந்ததால் ஏமாற்றமடைந்து வீடு திரும்பினர்.
ஊரடங்கு விதிமீறல்களையும் பொருட்படுத்தாமல் ஏராளமான அசைவப் பிரியர்கள் மீன் சந்தைக்கும், தர்கா பகுதி இறைச்சிக் கடைகளுக்கும் படையெடுத்து வந்த நிலையில், கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டிருந்ததால் மீன், மற்றும் இறைச்சிகளை வாங்க முடியாமல் ஏமாற்றத்துடன் ஏராளமான அசைவப் பிரியர்கள் திரும்பிச் சென்றனர். காஞ்சிபுரம் நகரத்தை பொறுத்தவரை பல்வேறு பகுதிகளில் காவலர்கள் சோதனைச் சாவடி அமைத்து பொதுமக்கள் வெளியே வருவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இருந்தும் பொதுமக்கள் பல்வேறு குறுக்கு வழிகள் மூலம் வெளியே வருவதை வாடிக்கையாக வைத்திருக்கின்றனர்.
கடுமையான ஊரடங்கு எதிரொலியாக கடந்த ஒரு வார காலமாக சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களான காஞ்சிபுரம் , செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரவும் வேகம் குறைந்து வருகிறது. இதனால் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் அரசு சொல்லும் விதிமுறைகளை மதிக்காமல் சமூகப் பொறுப்பு இல்லாமல் வெளியே சுற்றுவது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என புரிந்து ஊரடங்கின் முறையாக கடைபிடிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது