மார்ச் 31 வரை மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் எக்காரணம் கொண்டும் விடுப்பு எடுக்கக்கூடாது- இவ்வாறு சுகாதாரத் துறை தலைமைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியாகி வருகிறது.
கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் சூழலில் விடுமுறை எடுக்கக்கூடாது. அவசர தேவைகளுக்கு விடுப்பு தேவை என்றால் மருத்துவக் கல்லூரி முதல்வர், பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர், நலப்பணி இணை இயக்குநர் ஆகியோர் அனுமதி அளித்தபின், ஆட்சியர் ஒப்புதல் தந்த பிறகே விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் தகவல் வெளியானது முன்களப் பணியாளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளரும் முன்னாள் அரசு மருத்துவருமான சாந்தி ரவீந்திரநாத் கூறும்போது, ''இப்போதே யாருக்கும் பெரும்பாலும் எந்த விடுமுறையும் அளிப்பதில்லை. ஏற்கெனவே 2 ஆண்டுகளாக மருத்துவர்கள் கடுமையாகப் பணி செய்துகொண்டிருக்கின்றனர்.
நேரடி போர்வீரர்கள்
முகக்கவசம் போடவேண்டும் என்றுகூடத் தெரியாமல் நேரடியாக பாதிக்கப்பட்டோர், தடுப்பூசி இல்லாத காலகட்டத்தில் கொரோனா என்றாலே என்னவென்று தெரியாமல், எப்படிப் பரவும் என்றுகூட அறியாமல் பணியாற்றியோர் இருக்கிறார்கள். மற்ற துறைகளில் பாதுகாப்பாகப் பணியாற்றிக் கொண்டிருந்தாலும் மருத்துவத்துறை சார்ந்தவர்கள் மட்டுமே நேரடியான போர்வீரர்களாக இருந்தார்கள், இருக்கிறார்கள். பலர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். சிலர் இறந்தும் போயினர். மிக மோசமான இரண்டாவது அலையை தைரியத்துடன் மருத்துவர்கள் எதிர்கொண்டனர்.
தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, அதை மக்களுக்குச் செலுத்துவதும் அவர்களின் பொறுப்பானது. இதுவரை தமிழகத்தில் 8 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. அதேபோல தினந்தோறும் கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. தொடர் வேலைப் பளுவால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மருத்துவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குடும்பத்தினரும் பயத்தில் உள்ளனர்.
இந்த சூழலில், மார்ச் இறுதி வரை விடுப்பு ரத்து என்ற செய்தி மருத்துவர்கள் மத்தியில் கடுமையான அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் விடுமுறை கூட இருக்காதோ என்ற அச்சம் உள்ளது. தேவையற்ற விடுமுறைகளை மருத்துவர்கள் எடுப்பதில்லை.
'அச்சத்திலும் குழப்பத்திலும் மருத்துவர்கள்'
பெருந்தொற்றுக் காலத்தில் நீண்ட விடுப்பு எடுக்க வேண்டாம் என்று கூறுவதில் நியாயம் உள்ளது. டெங்கு காலத்தில்கூட அவ்வாறு கூறப்பட்டது. ஆனால் இப்போது விடுமுறையே எடுக்கக்கூடாது. எடுக்க வேண்டுமெனில் ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் என்று வெளியான தகவல் உண்மையென்றால், அது நியாயமில்லை. இத்தகைய செய்திகள் ஊடகங்களில் வெளியாகி உள்ளதால், மருத்துவர்கள் அச்சத்திலும் குழப்பத்திலும் உள்ளனர். இந்தத் தகவலின் உண்மைத் தன்மையையும் முழு விவரங்களையும் சுகாதாரத் துறை செயலாளர் தெரிவிக்க வேண்டும்.
இன்றுகூட ஒரு செவிலியர் இதை எதிர்த்துப் போராட்டம் நடத்தலாமா என்று கேட்டார். 'முறையான அறிவிப்போ, சுற்றறிக்கையோ வரும்வரை அவ்வாறு செய்யக்கூடாது, காத்திருப்போம்!' என்று தெரிவித்தேன். விடுமுறை குறித்த உண்மையான தகவலைத் தெரிவித்து, மருத்துவ முன்களப் பணியாளர்களின் உடல், மன நலனைக் காக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது'' என மருத்துவர் சாந்தி தெரிவித்தார்.
'கழிப்பறைகூடச் செல்ல முடியாது'
இதுகுறித்துப் பெயர் கூற விரும்பாத அரசு மருத்துவர் கூறும்போது, ''கொரோனா சிகிச்சை அளிக்கும்போது பிபிஇ கவச உடையை அணிந்துகொண்டு அதிக நேரம் இருந்தால் மூச்சு முட்டும். இயற்கை உபாதைகளுக்காகக் கழிப்பறைகூடச் செல்ல முடியாது. மரண வேதனையாக இருக்கும். அதை அணிவதற்கு முன்பே நன்றாக சாப்பிட்டுக்கொள்ள வேண்டும். பிறகு தண்ணீர்கூட அருந்த முடியாது. இதையெல்லாம் தாண்டித்தான் இரண்டாவது அலையைக் கடந்தோம்.
கடந்த வாரம் நடைபெற்ற அலுவல் கூட்டத்தில், தேவையற்ற விடுப்புகளை யாரும் எடுக்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டது. இப்போது மார்ச் இறுதி வரை மருத்துவப் பணியாளர்களுக்கு விடுப்பு கிடையாது என்று செய்திகள் பரவி வருகின்றன. சென்னை போன்ற நகரங்களில் கொரோனா பரவல் அதிகமாகி வருகிறது. நாங்கள் அனைவருமே, அநாவசியமாக விடுப்பு எடுக்காமல் அர்ப்பணிப்புடன் உழைத்து வருகிறோம். இந்த நேரத்தில் எந்த விடுப்பும் கிடையாது என்ற தகவல் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. இதுகுறித்து அரசு விரைவில் அதிகாரபூர்வமாக அறிவித்து, தெளிவுபடுத்த வேண்டும்'' என்று தெரிவித்தார்.
எனினும் ஓமந்தூரார் அரசு பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை டீன் ஜெயந்தி, ''இதுபோன்ற எந்தவொரு உத்தரவும் தங்களுக்குப் பிறப்பிக்கப்படவில்லை. சுற்றறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை'' என்று தெரிவித்தார்.
சுகாதாரத்துறைச் செயலாளர் திட்டவட்ட மறுப்பு
அதேபோல சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, ''மார்ச் இறுதி வரை விடுப்பு கிடையாது என்று நான் எங்குமே அறிவிக்கவே இல்லை. இது போலியான செய்தி. அதேபோல மருத்துவப் பணியாளர்கள் விடுப்பு எடுக்க, ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் நான் கூறவில்லை'' என்று திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்தார்.
கொரோனா தடுப்புப் பணிகளில் நேரம், காலம் பார்க்காமல் தீவிரமாக ஈடுபடுவது முதன்மை முன்களப் பணியாளர்களான மருத்துவப் பணியாளர்கள்... அவர்களுக்குப் போதிய ஓய்வு இருந்தால்தான், தொடர்ந்து தரமான சிகிச்சையைத் தர முடியும். அவர்களை நிர்ப்பந்தப்படுத்தினால் அது வேறு விதமான விளைவுகளை உண்டாக்கலாம். எனவே அரசு இந்த விவகாரத்தில் தெளிவான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.