நெய்வேலியில் உள்ள என்.எல்.சி நிறுவனத்தில் நிலம் வழங்கப்பட்டவர்களுக்கு வேலை கொடுக்கும் பிரிவின் கீழ், வடமாநிலத்தவர்களுக்கு வேலை கொடுக்கவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


என்.எல்.சி. விளக்கம்:


இதுதொடர்பாக என்.எல்.சி வெளியிட்டுள்ள அறிக்கையில் ”என்எல்சி நிறுவனம் இந்திய அளவிலான ஒரு நிறுவனமாக உள்ளது. என்.எல்.சிக்கு நிலம் கொடுத்தவர்களுக்கே பணி வழங்கப்பட்டுள்ளது. வேலை பெற்ற பட்டியலில் உள்ள 28 பேர் ராஜஸ்தானில் நிலம் கொடுத்தவர்கள். ராஜஸ்தானில் உள்ள பர்சிங்கார் சுரங்கங்கள், அனல் மின் நிலைய திட்டங்களுக்காக வழங்கப்பட்ட நிலத்தை கருத்தில் கொண்டு 28 பேருக்கும் வேலை வழங்கப்பட்டுள்ளது.  வரிசை எண்கள் 835 முதல் 862 வரையிலான அந்த  28 நபர்களும்  ராஜஸ்தானில் உள்ள  என்.எல்.சி  பர்சிங்கார் சுரங்கங்கள் மற்றும் அனல்மின் நிலையங்களில் தான் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தேசிய அளவிலான நிறுவனம் என்பதால்,  நிலம் வழங்கியவர்களுக்கு வேலை கொடுக்கப்பட்டடது தொடர்பான ஆர்டிஐ கேள்விக்கு, தேசிய அளவில் யார் யாருக்கெல்லாம் பணி வழங்கப்பட்டுள்ளது என்ற விளக்கம் கொடுக்கப்பட்டது. அதை தான் தற்போது சிலர் நிறுவனத்தின் நன்மதிப்பை கெடுக்கும் நோக்கில் தவறான செய்தியாக பரப்பி இருக்கக்கூடும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.


நிலத்திற்கு வேலை:


கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வரும் என்.எல்.சி இந்தியா நிறுவனத்தை அமைப்பதற்காக நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர பணி வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இருப்பினும் இந்த விவகாரத்தில் என்.எல்.சி நிர்வாகம் முறையாகச் செயல்படவில்லை என பல ஆண்டுகளாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 1956-ஆம் ஆண்டு தொடங்கி இப்போது வரை கடலூரில் 37,256 ஏக்கர் நிலம்,  என்.எல்.சி நிறுவனத்தால்  நிலக்கரியை வெட்டி எடுப்பதற்காக கையகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலங்கள் கிட்டத்தட்ட 25 ஆயிரம் குடும்பங்களுக்கு சொந்தமானவை. 


நீளும் பிரச்னை..!


அவர்களிடம் இருந்து என்.எல்.சி நிலங்களை கையகப்படுத்திய பிறகு அவர்கள் வாழ்வாதாரமான நிலமின்றி பல்வேறு வேலைகளுக்குச் சென்று வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் வாழ்வதற்கு மாற்று இடங்கள் வழங்கப்படவில்லை என்றும் நிலங்களைக் கொடுத்த 25 ஆயிரம் குடும்பங்களில் 1,827 பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது என்றும் குற்றம்சாட்டப்படுகிறது.


அதிர்ச்சி தந்த ஆர்டிஐ தகவல்:


இந்நிலையில் என்.எல்.சி நிர்வாகத்திற்கு நிலம் கொடுத்தும் அங்கு வேலை கிடைக்காத குப்புச்சாமி என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் என்.எல்.சி நிர்வாகத்திற்கு நிலம் கொடுத்த ஒதுக்கீட்டில் எத்தனை பேருக்கு பணி கொடுக்கப்பட்டுள்ளது என்ற விவரங்களை பெற்றுள்ளர். தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு என்.எல்.சி நிறுவனம் பதில் அளித்துள்ளது.அதில், 1990 முதல் 2012 வரை நிலம் கொடுத்ததற்காக 862 பேருக்கு என்.எல்.சியில் பணி வழங்கப்பட்டுள்ளது. இதில் 28 வட மாநிலத்தவர்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ளது என ஆர்.டி.ஐ மூலம் தெரியவந்துள்ளது.


பரபரப்பை எழுப்பிய பதில்:


நிலம் கொடுத்து வேலை பெற்றவர்களின் பட்டியலில் வட இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது. என்.எல்.சி பணி வழங்கியதில் 834 பேர் மட்டுமே நிலம் கொடுத்தவர்கள் என்றும், 28 வட மாநிலத்தவர்களுக்கு எப்படி வேலை வழங்கப்பட்டது என்றும் கேள்வி எழுந்தது. இந்நிலையில் தான் என்எல்சி  இந்திய அளவிலான ஒரு நிறுவனம் எனவும் அதற்காக, ராஜஸ்தானில் நிலம் கொடுத்தவர்களுக்கு அங்கு வேலை கொடுக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.