நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் தரப்பில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டு வந்த நிலையில் அதனை பிரதமர் மோடி கண்டுக்கொள்ளாமல் இருப்பதாக குற்றம்சாட்டி, அதைத் தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக மக்களவையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டனர்.


இதனைத் தொடர்ந்து இதற்கான நோட்டீஸ் எதிர்க்கட்சிகள் தரப்பில் வழங்கப்பட்டது. நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விவாதங்கள் பற்றி சபாநாயகர் அறிவிக்காமல் இருப்பதை எதிர்க்கட்சிகள் தரப்பில் கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்தில் 8 ஆம் தேதி முதல் 10 ஆம்  தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள், மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில் 8 ஆம் தேதி காங்கிரஸ் எம்.பி கவுரவ் கோகாய் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தை தொடங்கி வைத்தார். நேற்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக சாடி, மணிப்பூர் விவகாரம் குறித்து பேசினார். 


இந்நிலையில் இன்று 3வது நாளாக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது.


அப்போது பதிலுரையாற்றிய நிதியமைச்சர் நிமலா சீதாராமன், “ஐரோப்ப நாடுகளில் கூட பொருளாதாரம் மந்தமாக உள்ளது. இந்தியா என்ன விதிவிளக்கா? ஐரோப்பிய நாடுகளில் மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடு ஜெர்மனி, அங்கும் வரலாறு காணாத அளவு பொருளாதாரம் சரிந்துள்ளது. இந்தியாவை ஒப்பிடும் போது சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் பொருளாதாரம் மிகவும் பெரியது. உலக நாடுகளில் பொருளாதாரத்தில் நுகர்வோர் தேவை தேக்கம் அடைந்துள்ளது. அமெரிக்காவில் பொருளாதார வீழ்ச்சியின் காரணத்தால் பங்குச் சந்தை புள்ளிகள் கடுமையாக சரிந்தது. 2013 ஆம் ஆண்டு மோர்கன் ஸ்டான்லி, இந்திய பொருளாதாரத்தை பலவீனமான பொருளாதாரம் என குறிப்பிட்டார். ஆனால் இன்று அந்த நிலை மாறி, பொருளாதாரம் நல்ல நிலையில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளில் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியா பொருளாதாரம் மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. 2023 ஆம் ஆண்டில் ஜிடிபி 7.3% உள்ளது. உலக நாடுகளின் பொருளாதாரம் விழ்ச்சி அடைந்தாலும் இந்திய நாட்டின் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே சாத்தியமாக்கப்பட்டுள்ளது” என குறிப்பிட்டார். 


மேலும், ”எய்ம்ஸ் மருத்துவமனை தமிழ்நாட்டில் கட்டமைக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் திட்டமான இதற்கு முழு நிதியும் மத்திய அரசின் தாலைமையில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மீது எந்த கடனும் கிடையாது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் 900 படுக்கைகள் அமைக்கப்படும், வழக்கமான 750 படுக்கைகளுடன் நோய்த்தொற்று பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 50 மாணவர்களை கொண்ட மருத்துவ படிப்புகளும் தொடங்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரியில் தற்போது 99 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் (எய்மஸ் மருத்துவ மாணவர்களை சேர்த்து)” என குறிப்பிட்டுள்ளார்.


அதற்கு திமுக தரப்பில் நிர்மலா சீதாராமன் தவறான தகவல்களை தருகிறார் என முழக்கங்களை முன்வைத்தனர். அதனை தொடர்ந்து திமுகவினர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து பேசிய நிர்மலா சீதாராமன், “தமிழ்நாடு பற்றி பேச இன்னும் நிறைய உள்ளது ஏன் ஓடுகிறீர்கள். அனைத்தையும் கேட்டுவிட்டு செல்லுங்கள். எய்மஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கு காரணம் தமிழ்நாடு அரசு தான். இதனை அந்த அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும்” என தெரிவித்தார். 


நேற்றைய தினம் திமுக எம்.பி கனிமொழி, சிலப்பதிகாரம் படிக்க வேண்டும் என்ற கருத்திற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், “ மகாபாரதத்தில் திரௌபதி அவமானப்படுத்தப்பட்டதாக கனிமொழி குறிப்பிட்டார். மணிப்பூர், டெல்லி, மத்திய பிரதேசம் என இந்தியாவில் எந்த மூலை முடுக்கிலும் பெண்கள் அவமானப்படுத்தப்பட்டால் அதனை நிச்சயம் பொறுத்துக்கொள்ள முடியாது. ஆனால் இந்த நேரத்தில் நான் 1989 ஆம் ஆண்டில் நடைபெற்ற சம்பவத்தை குறித்து பேச விரும்புகிறேன். தமிழ்நாடு சட்டசபையில், எதிர்க்கட்சி தலைவராக ஜெயலலிதா இருந்த போது, அவரது உடைகள் கிழித்தெரியப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார். திமுகவினர் இந்த செயலை செய்து அவரை கண்டு எள்ளி நகையாடினர். திரௌபதி பற்றி பேசும் திமுகவினர், ஜெயலலிதாவை மறந்து விட்டார்கள். அன்று ஜெயலலிதா எடுத்த சபதத்தை நிறைவேற்றும் வகையில், இரண்டு ஆண்டுகளுக்கு பின் அவர் அதே சட்டசபையில் முதலமைச்சராக நுழைந்தார்" என கூறிப்பிட்டு நம்பிக்கையில்லா திர்மானம் நிச்சயம் தோல்வியில் தான் முடியும் என கூறி அமர்ந்தார்.