யுபிஎஸ்சி முதன்மை தேர்வர்களுக்கான ஊக்கத்தொகை அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த அரசு முடிவு செய்துள்ளது. 


ஊக்கத்தொகை:


மத்திய அரசு துறை மற்றும் நிறுவனங்களில் பணியாற்றுவதற்கான யுபிஎஸ்சி தேர்வில் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு ஓவ்வொரு ஆண்டும் ஊக்கத்தொகை வழங்கும் என, நடப்பு நிதியாண்டில் என தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில் நடப்பாண்டிற்கான ஊக்கத்தொகைக்கு விண்ணபிக்கும் முறை நாளை தொடங்கி 22ம் தேதி வரையில் நடைபெறும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக நான் முதல்வன்  சிறப்புத் திட்ட இயக்குநர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.


22ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம்:


அதன்படி, தமிழ் நாடு அரசின் 2023-24க்கான பட்ஜெட் உரையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC), அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியுடன் இணைந்து, ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப் பணிகள் தேர்வுகளுக்காகப் பயின்று வரும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி மற்றும் இதர தேவையான வசதிகளைச்செய்து உதவும் வகையில் ஒரு திட்டத்தை செயல்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்படி யு.பி.எஸ்.சி குடிமைப் பணிகள் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 25,000 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.


இத்திட்டத்தின் தொடக்கமாக. 07.08.2023, அன்று நடைபெற்ற நான் முதல்வன் திட்டத்தின் ஓராண்டு வெற்றி விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால், 2023ஆம் ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 மாணவர்களுக்கு முதன்மைத் தேர்வுக்குப் பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக தலா 25,000 ரூபாய்க்கான காசோலைகள் வழங்கி யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வுக்கான ஊக்கத்தொகைத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் இயங்கிவரும் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக 2023-ஆம் ஆண்டுக்கான 28.05.2023 அன்று நடைபெற்ற யு.பி.எஸ்.சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் முதன்மைத் தேர்வுக்குப் பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக 25,000 ரூபாய் ஊக்கத்தொகை நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஊக்கத்தொகையைப் பெறுவதற்கு யு.பி.எஸ்.சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள். https://www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிக்கையைப் படித்து பார்த்து, 11.08.2023 முதல் 22.08.2023 வரை விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது. 


மாணவர்களுக்கு பாராட்டு:


இதனிடையே, அரசுப்பள்ளிகளில் பயின்று ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்த தமிழகத்தை சேர்ந்த மாணவர்களை முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக சென்னை கோட்டூர்புரத்தில் நேற்று முன் தினம் நடைபெற்ற ந்கழ்ச்சியில் பேசிய அவர், ”கடந்த ஆண்டு முதன்மை கல்வி நிறுவனங்களுக்குச்‌ சென்று அரசுப்‌ பள்ளி மாணவர்களோட எண்ணிக்கை 75. இந்த ஆண்டு 225. இது மிகப்பெரிய சாதனை! அரசுப்‌ பள்ளி மாணவர்களில்‌ கடந்த ஆண்டு ஐ.ஐ.டி.க்கு போனவர்‌ ஒரே ஒருத்தர்தான்‌. ஆனால்‌ இந்த ஆண்டு, 6 பேர்‌ செல்கிறார்கள்‌. கடந்த ஆண்டு தேசிய தொழில்நுட்ப கழகம்‌, இந்திய தகவல்‌ தொழில்நுட்ப கழகங்கள்‌, தேசிய உணவு தொழில்நுட்பம்‌, தொழில்‌ முனைவு மற்றும்‌ மேலாண்மை நிறுவனம்‌ ஆகியவற்றிற்கு சென்றவர்கள்‌ 13 பேர்‌. இந்த ஆண்டு 55 பேர் செல்கிறார்கள்‌. National Forensics Science University-க்கு கடந்த கல்வியாண்டில்‌ சென்றவர்களின்‌ எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 0! ஆனால்‌ இந்த ஆண்டு 6 பேர்‌ தேர்வாகி இருக்கிறார்கள்‌. சிறிய உதவி கிடைத்தாலும் அரசுப்பள்ளி மாணவர்கள் அடித்து தூள் கிளப்புவார்கள்” எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.