அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதையில் வழிநடத்திய வழக்கில், 2018ம் ஆண்டு பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் நிர்மலா தேவி சிறையில் அடைக்கப்பட்டு, நேற்று நிர்மலா தேவி குற்றவாளி என நீதிமன்றத்தால் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. 


மாணவிகளை தவறாக நடத்திய வழக்கு:


விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றியவர் நிர்மலா தேவி. கடந்த 2018ம் ஆண்டு இவர் மாணவிகளை தவறான பாதையில் வழிநடத்தும் வகையில் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


அந்த ஆடியோவில் நிர்மலாதேவி மாணவிகளை சில நபர்களுடன் பாலியல் ரீதியாக உறவு வைத்துக்கொள்ள அழுத்தம் கொடுக்கும் வகையில் பேசியது தமிழக மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த ஆடியோ பெரும் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர் 2018ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி கைது செய்யப்பட்டார்.


10 ஆண்டுகள் தண்டனை:


அவர் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், விபச்சார தடுப்புச் சட்டம், தகவல் தொழில்நுட்ப பரிமாற்ற முறைகேடு தடுப்புச் சட்மட் என 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், நிர்மலாதேவி மட்டுமின்றி பேராசிரியர் முருகன் மற்றும் முனைவர் பட்டத்திற்கான ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.


கடந்த 8 ஆண்டுகளாக வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் நிர்மலா தேவியை குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கியது. அதேசமயம், பேராசிரியர் முருகன் மற்றும் ஆய்வு மாணவர் கருப்பசாமியை விடுதலை செய்து உத்தரவிட்டது. நிர்மலா தேவிக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், அவருக்கு இன்று 10 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது.


தமிழ்நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் முக்கிய நபர்கள், அப்போதைய தமிழ்நாடு ஆளுர் பன்வாரிலால் புரோகித் என பலரது பெயரும் அடிபட்டது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில், அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சந்தேகம் எழுப்பியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.


இந்த வழக்கில் நிர்மலா தேவி தரப்போ அல்லது அரசுத் தரப்போ மேல்முறையீடு செய்யுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள நிர்மலாதேவி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 


மேலும் படிக்க: Prajwal Revanna: பாலியல் வீடியோ விவகாரத்தில் பிரஜ்வால் இடைநீக்கம்: ஜேடிஎஸ் அதிரடி- ஆனால் ஒரு ட்விஸ்ட்!


மேலும் படிக்க: Broadway Bus Stand: பொதுமக்கள் கவனத்திற்கு! தீவுத்திடலுக்கு மாற்றப்படும் பிராட்வே பேருந்து நிலையம் - காரணம் என்ன?