ஆயிரக்கணக்கான பாலியல் வீடியோக்கள் வெளியான விவகாரத்தில் மதச்சார்பற்ற ஜனதா தள எம்.பி.யும் முன்னாள் பிரதமரின் பேரனுமான பிரஜ்வால் ரேவண்ணா, கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை முடியும் வரை அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக, மதச்சார்பற்ற ஜனதா தளம் தெரிவித்துள்ளது.






செய்தியாளர்களிடம் பேசிய கோர் கமிட்டி தலைவர் ஜிடி தேவகவுடா, ’’பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு எதிராக சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டிருப்பதை வரவேற்கிறோம். இதன் விசாரணை முடிவடையும் வரை, பிரஜ்வாலைக் மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று தலைவருக்குப் பரிந்துரை செய்ய முடிவெடுத்துள்ளோம்’’ என்று ஜிடி தேவகவுடா தெரிவித்துள்ளார்.


முன்னதாக, ரேவண்ணா வீடியோ விவகாரத்தில் மாநில அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் கூட்டணிக் கட்சியான பாஜவின் மூத்த தலைவர் அமித் ஷா கருத்துத் தெரிவித்து இருந்தார். மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் கூட்டம் நடைபெற உள்ளதாகவும் அதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி அளித்திருந்தார். இந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


நாங்கள் பொறுப்பாக முடியாது: இது தனிப்பட்ட விவகாரம்- குமாரசாமி  அந்தர்பல்டி!


கர்நாடக அரசியலையே உலுக்கிய ரேவண்ணா விவகாரத்தில் முகம் சரியாகத் தெரியவில்லை என்று முதலில் கூறி இருந்த ரேவண்ணாவின் உறவினரும் முன்னாள் முதல்வருமான குமாரசாமி, இன்று ரேவண்ணாவின் செயல்களுக்கு தேவகவுடாவோ தானோ பொறுப்பாக முடியாது என்று தெரிவித்துள்ளார். 


மேலும் பேசிய அவர், ’’வீடியோக்கள் வெளியான விவகாரத்தில் துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் பின்னணியில் இருக்கிறார். பிரஜ்வால் ரேவண்ணாவை மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டு வருவதில், அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். நாங்கள் அல்ல.


எங்கள் குடும்பத்தின் பெயரைக் கெடுப்பதற்காக காங்கிரஸ் இவ்வாறு சித்தரிக்கிறது. பிரஜ்வால் விவ்காரத்துக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது அவரின் தனிப்பட்ட பிரச்சினை. அவருடன் நான் தொடர்பில் இல்லை.


அரசுதான் பிரஜ்வாலைக் கொண்டுவந்து சட்டத்தின் முன்பு நிறுத்துவதில் பொறுப்பேற்க வேண்டும். கட்சி ரீதியாக சில முடிவுகளை எடுக்க நாங்கள் முடிவு செய்திருக்கிறோம்’’ என்று குமாரசாமி தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.