கோடைகாலத்தை ஒட்டி காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு வெப்பத்தை தணிக்கும் வகையில் மோர் வழங்கப்பட்டது. போக்குவரத்து காவல்துறையின் சேவையை பாராட்டி போக்குவரத்து காவலருக்கு கூலிங் கிளாஸ் வழங்கிய சமூக ஆர்வலர்.
கோடை வெயிலின் தாக்கம்
காஞ்சிபுரம் : கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தமிழ்நாட்டில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை வெயில் கொளுத்துவதால், மக்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். வடதமிழக உள் மாவட்டங்களில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே வெப்ப அலை வீசி வருகிறது. ஊட்டி கொடைக்கானலில் கூட இந்த முறை வெப்பம் அதிகரித்து இருக்கிறது.
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக ஈரோட்டில் 109 டிகிரி வெயில் நேற்று பதிவானது. இந்தநிலையில் இன்று இயல்பை விட படிப்படியாக வெப்பம் அதிகரித்து 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை கொடுத்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு அரசு வெப்பத்திலிருந்து பொதுமக்களை காக்க பல்வேறு அறிவுறுத்தங்களை கொடுத்தது. தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு இடங்களில் ORS குடிநீர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுபோக பல்வேறு இடங்களில் பல் தனியார் தொண்டு நிறுவன அமைப்புகள் சார்பிலும், அரசியல் கட்சியினர் சார்பிலும் குடிநீர் பந்தல் திறக்கப்படுகின்றன. அதேபோன்று வெயில் அதிகமாக இருக்கும் நேரங்களில் நீர் மோர் பந்தல் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.
கோடை வெயில் காஞ்சிபுரம்
தமிழகம் முழுவதும் கடந்த 10 தினங்களாக வெப்ப சலனம் அதிகம் காரணமாக பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு பொதுமக்களை மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் வர வேண்டாம் என அறிவுறுத்தியும் உடல் வெப்பத்தை தணிக்கும் வகையில் குளிர்பானங்கள் மற்றும் உணவு வகைகள் பழங்கள் ஆகியவற்றை உண்ண வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில், காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் கோடை வெப்பத்தை தவிர்க்கும் வகையில் சாலையில் வரும் பொது மக்களுக்கு இலவசமாக மோர் வழங்கப்பட்டது.
மூங்கில் மண்டபம் அருகே நடைபெற்ற இந்நிகழ்வில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் ராஜி உள்ளிட்ட போக்குவரத்து காவலர்கள் பொதுமக்களுக்கு மோர் வழங்கி, வெப்பம் அதிகம் காணப்படுவதால் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் எனவும், ஹெல்மெட் அணிந்து வாகன ஓட்டவும் அறிவுறுத்தினர். பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி பருகினர் காவல்துறையின் உபசரிப்பை பார்த்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்தார்.
கூலிங் கிளாஸ் வழங்கிய சமூக ஆர்வலர்
பொதுமக்களுக்கு போக்குவரத்து காவல்துறை சார்பில் இலவச மோர் வழங்கப்படுவதை கண்ட மாநகராட்சி ஒப்பந்ததாரர் ஒருவர், போக்குவரத்து காவல் துறையின் சேவையை பாராட்டி போக்குவரத்து காவல்துறையினருக்கு உடனடியாக அருகில் இருந்த கண்ணாடி கடையிலிருந்து கூலிங் கிளாஸ் வாங்கி அனைவருக்கும் வழங்கி அவர்களது சேவையை பாராட்டினார். காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு இடங்களில் இது போன்ற தண்ணீர் மோர் ஆகியவை வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. எப்பொழுதும் கண்டிப்பாக நடந்து கொள்ளும் காவல்துறையில் இப்படி கனிவாக நடந்து கொண்டது பொதுமக்கள் இடையே வரவேற்பை பெற்றது.