இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை விற்பனை செய்யவோ, நிலப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளவோ தடை விதித்து அத் துறையின் ஆணையர் குமரகுருபரன்  உத்தரவு பிறப்பித்துள்ளார். 


தமிழகம் முழுவதும் தற்போது இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் 44 ஆயிரம் கோயில்கள் உள்ளன. இக்கோயில்களுக்கு சொந்தமாக 1 லட்சம் கட்டிடங்கள், 4.5 லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளன.


கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்கள் பல்வேறு அரசு துறைகளுக்கும், பொதுத்துறை நிறுவனங்களுக்கும் வாடகை மற்றும் குத்தகைக்கு விடப்படுகிறது. இதன் மூலம் இந்து சமய அறநிலையத்துறைக்கு வருவாய் கிடைக்கிறது.


பொதுவாகவே வாடகை, குத்தகை மட்டுமே விடப்படுகிறது என்றாலும் கூட சில நேரங்களில் கோயில் சொத்துக்களை, அரசுத் துறைகளுக்கு விற்பனை செய்யும் நடைமுறையும் இருந்தது. இந்த  நிலையில், கோயில் சொத்துக்களை அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிடம்  ஒப்படைக்கும் போது, சரியான மதிப்பை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும், இது  தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் அவற்றை செய்ய  வேண்டும். அப்போது தான் அறநிலையத்துறைக்கு எதிர்பார்த்த வருவாய் கிடைக்கும் என்றும் இந்து அறநிலையத்துறை தரப்பில் கூறப்பட்டது.


ஏனெனில், கோயில்களை நிர்வகிப்போரால் சட்டப் பிரிவு வழிமுறைகளைப் பின்பற்றாமலும்,  ஆணையரின் அனுமதி பெறாமலும் கோயில் நிலங்கள் விற்பனை, அடமானம், நீண்டகால  குத்தகை போன்ற செயல்கள் நடந்துள்ளதாக புகார்கள் பல தரபிலும் இருந்து எழுந்த வண்ணம் இருந்தது. இது தொடர்பாக நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்கில் தானமாக வழங்கப்பட்ட சொத்துகளை விற்பதன் மூலம், அந்த சொத்து எதற்காக கொடுக்கப்பட்டதோ, அதன் பயனை அடைய முடியாமல் போய் விட்டதாக நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. இந்த நிலையில், அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்களை விற்பனை மற்றும் நில பரிவர்த்தனைகள் மேற்கொள்ள தடை விதித்து ஆணையர் குமரகுருபரன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.


இது குறித்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: 
இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள் விற்பனைக்கு வழங்குதல் மற்றும் நிலப் பரிவர்த்தனை செய்தல் கூடாது. அவ்வாறாக ஏதேனும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பின் அவற்றின் மீது மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. 


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




கோயில்மனை குடியிருப்போர் பிரச்சினை:


இதேபோல், தமிழ்நாட்டில் நீண்ட காலமாக நீடித்து வரும் கோயில்மனை குடியிருப்போர் பிரச்சினைகளுக்கு அரசு சுமூக தீர்வு காண்பது அவசியமாகும் என்று அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 


கோயில்மனைகளில் குடியிருப்போர் ஆண்டுக் குத்தகை செலுத்தும் முறையை மாற்றி, வீட்டின் நில மதிப்பின் அடிப்படையில் வாடகை நிர்ணயம் செய்யும் புதிய முறையை அரசு அமலாக்கத் தொடங்கியது. இதனால் கடுமையான வாடகை தொகை அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து வாடகை வசூலில் தேக்கமும், நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கோயில் மனையில் குடியிருப்போர் பாதுகாப்புக் கேட்டு அரசிடம் தொடர்ந்து முறையிட்டு வருகின்றனர்.


இந்த நிலையில் கோயில் மனை உள்ளிட்ட அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மனைகள், வீடுகள், கட்டிடங்கள், கடைகளுக்கான வாடகை நிர்ணயம் செய்ய அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவில் கோயில் மனை குடியிருப்போர் சங்கப் பிரதிநிதிகளையும் இணைக்கும் வகையில் தற்போது அமைக்கப்பட்ட குழுவை திருத்தி அமைக்க வேண்டும் எனக் கோரிக்கைகள் வலுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.