இந்தியாவுக்கு எதிராக பிரிவினைவாத பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக ஹிஸ்புத் தஹ்ரீர் அமைப்பின் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மற்றொரு நபரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று தமிழ்நாட்டில் கைது செய்தனர்.


இந்தியாவுக்கு எதிராக சதி திட்டம்:


தற்போது கைது செய்யப்பட்டவர் நகிப் பைசுல் ரஹ்மான் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த வழக்கில் கைது செய்யப்படும் ஏழாவது நபர் இவர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஹிஸ்புத் தஹ்ரீர் அமைப்பின் மாநில தலைவராக உள்ளார்.


இந்திய அரசாங்கத்தை ஜிகாத் வன்முறையின் வழியாக கவிழ்த்துவிட்டு, இஸ்லாமிய ஆட்சியை நிறுவவும் பாகிஸ்தானிடம் இருந்து ராணுவ உதவியை பெற்று காஷ்மீரை விடுவிக்கும் சதி திட்டத்தின் ஒரு பகுதியாக ஹமீத் ஹுசைன் உள்பட சிலருடன் இணைந்து தேர்தலுக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக நகிப் பைசுல் ரஹ்மான் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் நடந்த அதிரடி சோதனை:


தங்கள் விஷம பிரச்சாரத்தை மேற்கொள்ள பல்வேறு சமூக ஊடக கணக்குகளை இவர்கள் பயன்படுத்தி இருக்கின்றனர். தேர்தலில் வாக்களிப்பதற்கு எதிராக பிரச்சாரம் செய்திருக்கின்றனர். ஹிஸ்புத்-தஹ்ரீர் அமைப்பின் சித்தாந்தத்தின்படி இது, 'இஸ்லாமுக்கு எதிரானது/ஹராம்' என்றும் பரப்புரை செய்துள்ளனர்.


ரகசிய தகவல் தொடர்பு தளங்கள் வாயிலாக பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். தமிழகம் முழுவதும் பல குழுக்களுடன் இணைந்து பிரிவினைவாத பிரச்சாரங்களை நடத்தியிருந்ததாக என்ஐஏ அதிகாரிகள் கூறுகின்றனர். கடந்த ஜூலை மாதம், சென்னை நகர காவல்துறையிடம் இருந்து என்ஐஏவுக்கு வழக்கின் விசாரணை மாற்றப்பட்டது.


கடந்த மாதம், இந்த வழக்கு தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். சென்னை, தாம்பரம் மற்றும் கன்னியாகுமரியில் சந்தேகத்திற்குரிய 11 பேரின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள்  சோதனை நடத்தினர். மேலும் ஹிஸ்புத் தஹ்ரீர் அமைப்புக்கு சொந்தமான டிஜிட்டல் சாதனங்கள், கணக்கில் வராத பணம் மற்றும் புத்தகங்களை கைப்பற்றினர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.


இதையும் படிக்க: Japanese Course Free Training: ஜப்பான் மொழி கற்க அரசு 3 மாத இலவசப் பயிற்சி- ஆண்டுக்கு ரூ.21 லட்சம் ஊதியம்- விண்ணப்பிக்க தயாரா?