சாம்சங் ஊழியர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 


காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அந்த வகையில் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் பகுதியில் உலகின் முன்னணி நிறுவனமான சாம்சங் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் சுமார் 1500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். 


தொடரும் சாம்சங் ஊழியர்களின் போராட்டம்:


சில மாதங்களுக்கு முன்பு தொழிற்சாலையில், தொழிலாளர் சிஐடியு தொழிற்சங்கத்தை தொடங்கினர். தொழிற்சங்கத்திற்கு அனுமதி வழங்க வேண்டும், இந்த கோரிக்கையை சாம்சங் நிர்வாகம் நிராகரித்தது. இந்த சூழலில் கடந்த மாதம் ஒன்பதாம் தேதி முதல் 900க்கும் மேற்பட்ட சிஐடியு தொழிற்சங்க நிர்வாகிகள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


தொழிலாளளர்- நிறுவனம்- அரசு முத்தரப்பு பேச்சுவார்த்தையில் முழுமையான தீர்வு எட்டப்படாத நிலையில், அரசு தரப்பில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக செய்திகள் வழங்கப்பட, தொழிலாளர்கள் அதனை முற்றிலுமாக மறுத்து போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.


இதற்கிடையே,  சமூக விரோதிகள், மாவோயிஸ்டுகள் சிலர் தொழிலாளர்கள் என்ற போா்வையில் உள்நுழைந்து, திசை திருப்ப முயற்சி செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, போராட்டத்திற்கு சென்ற ஊழியர்களை காஞ்சிபுரம் போலீசார், தடுத்து நிறுத்தி பேருந்தில் அடையாள அட்டை சோதனை செய்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாம்சங் ஊழியர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர்.


சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி:


இந்த நிலையில், சாம்சங் ஊழியர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஆட்கொணர்வு மனுவானது சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை இன்று பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உயர் நீதிமன்றம், "சாம்சங் ஊழியர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த தடையில்லை. 


தொடர் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட சாம்சங் தொழிலாளர்கள் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளனர். சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் மறுத்து விட்டதால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.


இந்த பிரச்னைக்கு விரைந்து தீர்வு காண டி.ஆர்.பி.ராஜா, தா.மோ. அன்பரசன், சி.வி.கணேசன் ஆகிய அமைச்சர்களை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் களத்தில் இறக்கினார். இந்தக் குழுவினா் சாம்சங் நிறுவனத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில், தொழிற்சங்கம் அமைப்பதைத் தவிர, மற்ற அனைத்து கோரிக்கைகளும் நிறுவனத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இருப்பினும், தொழிற்சங்கம் அமைக்க அனுமதி கோரி தொடர் போராட்டம் நடந்து வருகிறது.