ஹிஸ்புத் தஹ்ரீர் வழக்கு தொடர்பாக தமிழ்நாட்டின் ஐந்து மாவட்டங்களில் 10 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர். சோதனைக்குப் பிறகு இருவரைக் கைது செய்தனர்.


அதிரடி காட்டிய என்.ஐ.ஏ. அதிகாரிகள்:


கைது செய்யப்பட்ட இருவரும், ஹிஸ்புத்-தஹ்ரீர் என்ற சர்வதேச பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள். ஹிஸ்புத்-தஹ்ரிரின் நிறுவனர் தாகி அல்-தின் அல்-நபானியால் எழுதப்பட்ட இஸ்லாமிய கலிபாவை மீண்டும் நிறுவுவதற்கும், அதன் அரசியலமைப்பை அமல்படுத்துவதற்கும் இந்த அமைப்பு வேலை செய்து வருகிறது.


கைதான இருவரும் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான், முஜிபுர் ரஹ்மான் அல்தம் சாஹிப் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். என்ஐஏ அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், "தீவிரவாத சித்தாந்தங்களில் இளைஞர்களை ஈர்க்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர்.


ரகசிய வகுப்புகளை நடத்தி வருகின்றனர். அதில், ஜனநாயகம் மற்றும் இந்திய அரசியலமைப்பு, சட்டம் மற்றும் நீதித்துறை போன்றவை இஸ்லாத்திற்கு எதிராக உள்ளது என பிரச்சாரம் செய்து வருகின்றனர்.


தமிழ்நாட்டு இளைஞர்களை குறிவைக்கிறதா தீவிரவாத அமைப்புகள்? 


இந்தியா இப்போது தாருல் குஃப்ர் (நம்பிக்கை இல்லாதவர்களின் நாடு) என்றும், வன்முறை ஜிஹாத் மூலம் இந்தியாவில் இஸ்லாமிய அரசை நிறுவுவதன் மூலம் அதை தாருல் இஸ்லாமாக மாற்றுவது அவர்களின் கடமை என்றும் இளைஞர்களுக்கு கற்பிக்கப்படுகிறது.


 






இன்றைய அதிரடி சோதனையின்போது மொபைல் ஃபோன்கள், லேப்டாப், சிம் கார்டுகள் மற்றும் மெமரி கார்டுகள் போன்ற டிஜிட்டல் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதோடு, ஹிஸ்புத் தஹ்ரீர், கிலாஃபா, இஸ்லாமிய அரசு, கிலாஃபா அரசு, அதன் நிதி கட்டமைப்புகள் போன்றவற்றின் சித்தாந்தம் அடங்கிய புத்தகங்கள் மற்றும் அச்சுப் பிரதிகள் உட்பட பல ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.