நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 3 மணிநேரத்தில் மழை:
விழுப்புரம், கடலூர், ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை அறிவிப்பு:
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக இன்றும் நாளையும் கோவை மற்றும் நீலகிரி மலைப் பகுதிகளின் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், அடுத்த 5 தினங்களுக்கு தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:
சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இன்று முதல் ஜூலை 4 வரையிலான கால அளவில் மன்னார் வளைகுடா மற்றும் அதனையொட்டிய தென் தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்றானது, மணிக்கு சுமார் 35 கி.மீ முதல் 45 கி.மீ வரை வீசக்கூடும் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆகையால், மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், நீலகிரி ( பந்தலூர் ) பகுதியில் அதிகபட்சமாக 7 செ.மீ மழை அளவானது பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கோவை மாவட்டத்தில் பரவலாக லேசான மழை, அவ்வப்போது பெய்து வருகிறது. இரவு நேரங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்து, குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் நேற்று பரவலாக கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் கனமழை பெய்து வருகிறது.
இதை தொடர்ந்து, மேலும் 2 நாட்களுக்கு இந்த பகுதிகளுக்கு, கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.