மூன்றாவது ஆலோசனைக் கூட்டத்தில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்கப்படுகிறது.


எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம்:


2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜகவை வீழ்த்தும் நோக்கில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் விதமாக, பாட்னாவில் முதல் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார் அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் மார். அதைதொடர்ந்து, அண்மையில் காங்கிரஸ் தலைமையில் பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்திய என பெயரிடப்பட்டது. இதையடுத்து, மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் மும்பையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.


தேதியில் குழப்பம்?


மூன்றாவது ஆலோசனைக் கூட்டம், ஆகஸ்ட் மாதம் 25 மற்றும் 26ம் தேதிகளில் நடைபெறும் என முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்த தேதிகளில் வெவ்வேறு பணிகள் இருப்பதால், கூட்டத்தை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என முக்கிய தலைவர்கள் பலரும் வலியுறுத்தி இருந்தனர். இதனால், ஆலோசனைக் கூட்டம் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்படும் என கூறப்பட்டது.  




பெங்களூரு ஆலோசனைக் கூட்டத்தின் போது எடுத்த புகைப்படம்


ஆகஸ்ட் 30ம் தேதி கூட்டம்?


இந்நிலையில் ஆகஸ்ட் 30ம் தேதி எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனநாயகத்திற்கான இந்தியா கூட்டணி என்ற பெயரில் திமுக ஐடி விங் சார்பில், டெல்லியில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் கருத்தரங்கு நடைபெற்றது. அதில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், எதிர்க்கட்சிகளின் அடுத்த ஆலோசனை கூட்டம் ஆகஸ்ட் 30ம் தேதி நடைபெறும் என தெரிவித்துள்ளார்.


கூட்டணி பெயரை மாற்ற பரிந்துரை:


கூட்டத்தில் பேசிய ஜெய்ராம் ரமேஷ் “கூட்டணியின் பெயரை பாரதத்துக்கான இந்தியா (INDIA for BHARAT (Bring harmony, amity, reconciliation and trust)) என பெயர் மாற்றலாம்.  இது போன்ற ஒரு பெரிய கூட்டணி அமைக்கப்படுவது இதுவே முதல் முறை. பாட்னா மற்றும் பெங்களூரு கூட்டங்களை  தொடர்ந்து ஆகஸ்ட் 30 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் மும்பையில் இந்தியா கூட்டணியின் அடுத்த கூட்டம் நடைபெறும்.  இந்த கூட்டத்தின் போது கொடுக்கல் வாங்கல் அதிகமாக இருக்கும்” என பேசியுள்ளார். இதனால், தொகுதிப் பங்கீடு மற்றும் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர்கள் குறித்து விவாதிக்கபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மம்தா பானர்ஜி:


இதனிடையே, எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் தொடர்பாக பேசிய மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, “மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் நடைபெறும்” என தெரிவித்துள்ளார். இதனால், கூட்டம் எந்த தேதியில் தொடங்கும் என்ற குழப்பம் இருந்தாலும், இந்த மாத இறுதியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவது உறுதி என தகவல்கள் தெரிவிக்கின்றன.


பாஜக மீது குற்றச்சாட்டு:


இதனிடயே, ”2024 தேர்தலுக்கு பாஜக ஏற்கனவே திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். எங்களுக்கு சில ஆதாரங்கள் கிடைத்துள்ளன. 2019ம் ஆண்டு தேர்தலில் பாஜக மோசடி செய்துள்ளதாக அசோகா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவரின் ஆய்வறிக்கை தொடர்பாக, இந்திய கூட்டணியின் அடுத்த ஆலோசனைக் கூட்டத்தில்  விவாதிப்போம். பேரழிவு, வகுப்புவாத பதட்டங்கள் மற்றும் வேலையில்லா திண்டாட்டத்தில் இருந்து நாட்டை காப்பாற்ற இந்திய கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது” எனவும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.


சரத் பவாரின் திட்டம் என்ன?


பாஜக அரசையும், பிரதமர் மோடியையும் சரத் பவார் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் தான், அவரது கட்சியை சேர்ந்த பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் உடன் பாஜக கூட்டணியில் இணைந்து அஜித் பவார் நிதியமைச்சர் பதவியை பெற்றுள்ளார். இதனிடையே, கடந்த 1ம் தேதி புனேவில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, அவருக்கு விருது வழங்கினார் சரத் பவார். இதனால், அவர் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் நீடிப்பாரா அல்லது பிரிந்து சென்று பாஜகவில் சேர்ந்துவிடுவாரா என்ற குழப்பம் கூட்டணியை சேர்ந்த பல கட்சி தலைவர்களிடையே நிலவுகிறது. இதனால், 3வது ஆலோசனைக் கூட்டத்தில் சரத் பவார் பங்கேற்பாரா என்பதே சந்தேகமாக உள்ளது.