தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக தக்காளி கிலோ 100 ரூபாய் தாண்டி விற்கப்படுவதால் பொதுமக்கள் சிரமமடைந்து வருகின்றனர். சேலத்தில் உள்ள சந்தைகளில் தக்காளி ஒரு கிலோ 120 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் சேலம் மாநகர் செவ்வாய்பேட்டை பால் மார்க்கெட் பகுதியில் உள்ள சாலையோரத்தில் தக்காளி கடை வைத்து வியாபாரம் செய்து வருபவர் சிவகாமி அம்மாள் (52), இவர் வியாபாரம் முடித்துவிட்டு இரவு இரண்டு பெட்டிகளில் இருந்த தக்காளியை அங்கேயே பாதுகாப்பாக சாக்குபையில் மூடி வைத்துவிட்டு தூங்க வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் அதிகாலை எழுந்து சிவகாமி வியாபாரம் செய்யும் கடையின் இடத்திற்கு வந்துள்ளார்.



அப்போது அங்கு இரண்டு பெட்டிகளில் வைத்திருந்த 50 கிலோ தக்காளி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் தக்காளியை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.


இதுகுறித்து சேலம் செவ்வாய்ப்பேட்டை காவல் நிலையத்தில் சிவகாமி புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் ஜெயதேவி மற்றும் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தக்காளியை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகாமி மூதாட்டி கடையிலேயே இரண்டாவது முறையாக தக்காளி திருட்டுப் போய் இருப்பது குறிப்பிடத்தக்கது.



இதுகுறித்து சிவகாமி கூறுகையில், "கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தக்காளி விற்பனை செய்து வருகிறேன். தினமும் வியாபாரத்தை முடித்துவிட்டு கடை அமைந்துள்ள பகுதியில் தக்காளி கிரேடுகளுடன் வைத்துவிட்டு செல்வேன். மக்கள் அதிகம் நடமாடும் பகுதி என்பதாலும், காவலர் கண்காணிப்பு அறை மற்றும் காவலர் சிசிடிவி கேமரா இருப்பதால் பயமின்றி வீட்டிற்கு செல்வேன். இதேபோன்றுதான் நேற்று முன்தினம் கடையில் உள்ள தற்காலிகளை எடுத்து வைத்துவிட்டு வீட்டிற்கு சென்றேன். ஆனால் அதிகாலை வந்து பார்த்தபோது இரண்டு கிரேடுகளில் வைத்திருந்த 50 கிலோ தக்காளி மர்ம நபர்கள் எடுத்துச் சென்ற விட்டனர். இதன் மதிப்பு ரூபாய் 7,000 ஆகும். உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தேன். அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தக்காளி விலை அதிகம் உள்ளது. இது போன்ற காரியங்களில் சிலர் ஈடுபடுகின்றனர். அன்றாட வாழ்க்கை நடத்துவதற்கு பணம் இல்லாமல் சிரமப்பட்டு வருகிறோம். எங்களிடம் இருந்து திருடிச் சென்றவர்களை காவல்துறையினர் கண்டறிந்து தகுந்த தண்டனை வழங்க வேண்டும்” என்று கூறினார்.