தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான புதிய அரசு பதவியேற்ற பிறகு ஆவின் பால் குறைக்கப்பட்டது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் ஆவின் பாலை தினசரி கூடுதலாக 2 லட்சம் நபர்கள் வாங்கி பயன்பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் தற்போது தினசரி 26 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு 2 கோடியே 50 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் ஒரு கோடியே 50 லட்சம் லிட்டர் பால் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. மீதமுள்ள பால் பல்வேறு வகையிலான பால் பொருட்களாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதே சமயத்தில் புதிய வாடிக்கையாளர்கள் என்ற பெயரில் போலி முகவர்ளும் ஆவின் பால் வாங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களின் பால் பாக்கெட்டுகளின் விலையை காட்டிலும் ஆவின் பால் ரூபாய் 7 குறைவாகவே விற்பனை செய்யப்படுகிறது.




ஆவின் பால் தினசரி விநியோகிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், மாதாந்திர அட்டை பயன்படுத்தி பல இடங்களில் பொதுமக்கள் தினசரி ஆவின் பாலை வாங்கி வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக தினசரி பல லிட்டர் ஆவின் பால் போலி முகவர்களுக்கு சென்று அடைந்ததாக ஆவின் நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதை முடிவுக்கு வர வேண்டும் என்பதற்காகவும், ஆவின் பால் தகுந்த நபர்ளுக்கு சென்றடைய வேண்டும் என்பதற்காகவும் ஏற்கனவே பால் வாங்கி வருபவர்களும், புதியதாக பால் வாங்க வருபவர்களும் தங்களது முழு விவரங்களையும் இனி அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தங்களது ஆதார் எண், பிறந்த தேதி, முகவரி, வீட்டில் எத்தனை நபர்கள் உள்ளனர், எத்தனை பால் பாக்கெட்டுகள் விநியோகிக்கப்படுகிறது, சிறியவர்கள், பெரியவர்கள், தொலைபேசி எண், எந்த பகுதியில் பால் வாங்கப்படுகிறது உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அந்த விண்ணப்பம் மூலம் அளிக்க வேண்டும்.




இந்த நடவடிக்கை மூலமாக ஆவின் பாலை வாங்கும் தகுதியான வாடிக்கையாளர்கள் எத்தனை நபர்கள், போலி முகவர்கள் எத்தனை நபர்கள் என்ற விவரங்கள் திரட்டப்பட்டு, அதன் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஆவின் பால் லிட்டருக்கு ரூபாய் 3 குறைக்கப்பட்டது. சமன்படுத்தப்பட்ட ஆவின் பால் ஒரு லிட்டர் 40-இல் இருந்து ரூபாய் 37-ஆக குறைக்கப்பட்டது. இதேபோல், சமன்படுத்தப்பட்ட பால் அரை லிட்டர் ரூபாய் 20ல் இருந்து 18.50 ஆக குறைக்கப்பட்டது. நிலைப்படுத்தப்பட்ட பால் 22.50ல் இருந்து 21 ஆக குறைக்கப்பட்டது. நிறை கொழுப்பு பால் 24.50ல் இருந்து 23 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் 19.50ல் இருந்து 18 ஆக குறைக்கப்பட்டுள்ளது.