வங்கக் கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், தமிழ்நாட்டில் ஒரு வாரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது எந்தெந்த பகுதிகள் என்பதை தற்போது பார்க்கலாம்.

Continues below advertisement

வங்கக் கடலில் இன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி

தெற்கு மியான்மர் கடலோரப் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், அதன் காரணமாக மத்திய கிழக்கு வங்கக் கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, அக்டோவர் 31-ம் தேதி, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், கிழக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து, நேற்று காலை மத்திய கிழக்கு மற்றும் அதை ஒட்டிய வடகிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலு குறைந்து, தற்போது வரை அதே பகுதியில் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

இது, கிழக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து, தெற்கு குஜராத் மற்றும் அதைனை ஒட்டிய வடக்கு மகாராஷ்டிர கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து, காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலு குறையும் எனவும் கூறப்பட்டுள்ளது.

7-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

இந்நிலையில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், வரும் 7-ம் தேதி வரை, இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் வானிலை எப்படி.?

சென்னையை பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்வியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், அதன் காரணமாக, மீனவர்கள் வரும் 5-ம் தேதி வரை, மத்திய கிழக்கு வங்கக் கடல், அந்தமான் கடல் பகதிகளுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.