பிரபல நரம்பியல் நிபுணர் சுப்பையா கொலை வழக்கில் உறவினர்கள் உட்பட 7 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து சென்னை முதலவாது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 


2013 செப்டம்பர் 9ம் தேதி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கூலிப்படையினரால் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டார். இதுதொடர்பான வழக்கில்,சுப்பையாவின் உறவினர் பொன்னுச்சாமி, பொன்னுச்சாமியின் மனைவி மேரி புஷ்பம், மகன்கள் பேசில், போரில் மற்றும் கூலிப்படையினர் என 10 பேர் கைது செய்யப்பட்டனர்.  


இந்நிலையில், கூலிப்படையைச் சேர்ந்த ஐயப்பன் அப்ரூவராக மாறினார். இதனையடுத்து, வழக்கு விசாரணையில் பெரிய திருப்புமுனை ஏற்பட்டது. 2015ல் குற்றப்பத்திர்க்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அரசு மற்றும் எதிர் தரப்பில் 64 சாட்சியங்கள், 173 ஆவணங்கள், 42 சான்றுப் பொருட்கள் குறியீடு செய்யப்பட்ட நிலையில் , ஏழு ஆண்டுகள் விசாரணை நடைபெற்று வந்தது. 




இதற்கிடையே, வழக்கை விரைந்து விசாரித்து முடிக்கக்கோரி சுப்பையாவின் உறவினர் மோகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார். கடந்த மே 31ஆம் தேதி வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி அமர்வு, 31ஆம் தேதிக்குள் விசாரணையை முடிக்க உத்தரவிட்டது.


இந்நிலையில், அப்ரூவராக மாறிய ஐயப்பனைத் தவிர எஞ்சிய 9 பேரும் குற்றவாளிகள் என சென்னை முதலாவது அமர்வு நீதிமன்றம் சில நாட்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில், இவர்களுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது. அதில், பொன்னுச்சாமி, அவரின் மகன்கள் பேசில், போரிஸ், பேசிலின் நண்பர்களான வில்லியம்ஸ், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், கூலிப்படையைச் சேர்ந்த முருகன், செல்வபிரகாஷ் ஆகியோருக்கு தூக்குத் தண்டனையும், பொன்னுச்சாமியின் மனைவி மேரி புஷ்பம், ஏசு. ராஜன் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது. 


சட்டத்தின் மீதான தங்களின் நம்பிக்கை வீண் போகவில்லை என்று சுப்பையாவின் மனைவி தெரிவித்தார். தீர்ப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், " இது மிகவும் உணர்வுபூர்வமானத் தருணம். அரசு நிர்வாகம், நீதித்துறை, காவல்துறை, அரசு வழக்கறிஞர், ஊடகம் என அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீதித்துறை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அளித்துள்ளது. சட்டத்தின் மீதான எங்களின் நம்பிக்கை  வீண் போகவில்லை. இந்த விஷயத்தில் ஓரளவிற்கு தாமதம் இருந்தாலும் கூட, நீதி மறுக்கப்படவில்லை. உயிரிழந்த எனது கணவர் மீண்டும் வரப்போவதில்லை. நாங்கள் இழந்தது என்றும் கிடைக்கப் போவதில்லை. ஆனால், இது போன்ற குற்றங்கள் நடக்காமல் இருக்க இந்த தீர்ப்பு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும்" என்று தெரிவித்தார்.  


மேலும், வாசிக்க: 


TN Budget: PTR வெளியிடப்போகும் வெள்ளை அறிக்கையில் என்ன இருக்கும்... வெள்ளை அறிக்கை என்றால் என்ன?


7.5 reservation | தொழில்முறை படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு