மசோதா நிறைவேற்றம், ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து ஆளுநர் ரவி பேசியது சர்ச்சைகளைக் கிளப்பிய நிலையில், உண்மையில் அவர் என்ன பேசினார் என்பதுகுறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. 


இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:


''தமிழ்நாடு ஆளுநர்‌ ஆர்‌.என்‌.ரவி இந்திய குடிமைப்பணி குரூப்‌ 1 தேர்வுகளுக்கு தயாராகும்‌ மாணவ-மாணவியருடன்‌ சென்னை ராஜ்‌ பவனில்‌ உள்ள தர்பார்‌ அரங்கில்‌ நேற்று கலந்துரையாடினார்‌.


அப்போது மாணவ மாணவியருக்கு பல்வேறு ஆலோசனைகளை ஆளுநர்‌ வழங்கினார்‌. தேர்வுக்குத் தயாராவது, படிப்பதை புரிந்து படிப்பது, ஆங்கிலத்தில்‌ புதுப்புது வார்த்தைகளை கற்றுக்கொள்ள முயற்சிப்பது, தேர்வுகளை எப்படி எதிர்கொள்வது, ஆளுமையை எவ்வாறு வளர்த்துக்கொள்வது என்பன உள்ளிட்ட ஆலோசனைகளை ஆளுநர்‌ வழங்கினார்‌.


இந்திய காவல்‌ பணியில்‌ பல்வேறு நிலைகளில்‌ பணியாற்றி பிறகு, மத்திய அரசு பணியை தேர்வு செய்து பணியாற்றியது குறித்தும்‌ அரசின்‌ பல்வேறு துறைகளில்‌ சவால்‌ மிகுந்த இடங்களில்‌ பணியாற்றிய அனுபவங்களில்‌, குறிப்பாக  வடகிழக்கு மாநிலங்களில்‌ பணியாற்றிய அனுபவங்களை ஆளுநர்‌ குறிப்பிட்டார்‌. 


சவாலான மாநிலங்களில்‌ பணியாற்றிய தனக்கு, தற்போதுதான்‌ அமைதியான சூழ்நிலை நிலவும்‌, கலாச்சாரம்‌, பாரம்பரிய பெருமை கொண்ட மக்கள்‌ வாழும்‌ தமிழ்நாட்டில்‌ வசிக்கவும்‌ சேவையாற்றவும்‌ வாய்ப்பு கிடைத்தது என்றும்‌ தனிப்பட்ட விஷயத்தில்‌ இது தனக்கு கிடைத்த வளர்ச்சி என்றும்‌ சொல்லலாம்‌ என்றும்‌ ஆளுநர்‌ கூறினார்‌. தொன்மை வாய்ந்த மொழியான தமிழை கற்றுக்கொள்வதாகவும்‌ ஆளுநர்‌ பெருமிதம்‌ பொங்க தெரிவித்தார்‌.


பின்னர்‌ ஆளுநர்‌ மாணவ மாணவியரின்‌ கேள்விகளுக்கு பதிலளித்தார்‌. அப்போது ஒரு மாணவி ஆளுநரின்‌ பணி குறித்து கேள்வி எழுப்பினார்‌.


ஆளுநரின்‌ உச்சபட்ச பொறுப்பே அரசியலைமைப்பை பாதுகாப்பது. மாநிலமோ, மத்திய அரசோ இரண்டு அமைப்புகளுமே அரசியலமைப்புக்கு உட்பட்டுத்தான்‌ நடக்க வேண்டும்‌.


அரசியலமைப்பில்‌ மத்திய அரசுக்கும்‌ மாநில அரசுக்கும்‌ உள்ள அதிகாரங்கள்‌ என்ன என்பது தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. ஏழாவது அட்டவணையில்‌ மத்திய, மாநில அரசுகள்‌ குறித்த சட்டங்கள்‌, மத்திய அரசின்‌ அதிகாரம்‌ என்ன, மாநில அரசு என்னென்ன சட்டங்கள்‌ இயற்றலாம்‌, ஒத்திசைவு பட்டியலில்‌ உள்ள விஷயத்தில்‌ மத்திய அரசு சட்டமியற்றலாம்‌, மத்திய அரசு சட்டம்‌ இயற்றியிருக்காவிட்டாலும்‌கூட மாநில அரசு சட்டமியற்றலாம்‌, ஆனால்‌ அது மத்திய அரசின்‌ சட்டத்திற்கு இசைவாக இயற்றப்பட்டிருக்க வேண்டும்‌ போன்றவை தெளிவாக உள்ளன.


ஆளுநரின்‌ பணி என்ன? 


சட்டமன்றத்தில்‌ ஒரு கட்சிக்கு முழு மெஜாரிட்டி இருக்கலாம்‌. அதை வைத்து அதில்‌ எந்த மசோதாவையும்‌ நிறைவேற்றலாம்‌. ஆனால்‌ அதை சட்டம்‌ ஆக்கும்‌ இடத்தில்‌தான்‌ மாநில ஆளுநரின்‌ பங்கு வருகிறது. ஆளுநரின்‌ பணி என்ன? அந்த இயற்றப்பட்ட சட்டம்‌ மாநில அரசின்‌ அதிகாரத்தைத் தாண்டி போகாமல்‌ உள்ளதா என்பதைக் கண்காணிப்பது ஆகும்‌. அது எல்லை தாண்டி இருந்தால்‌ ஆளுநரின்‌ பொறுப்பு அந்த இடத்தில்‌ அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பது ஆகும்‌.


மாநில சட்டமன்றம்‌, மாநில சட்ட மேலவை போன்றவை குறித்து குறிப்பிட்டுள்ள அரசியலமைப்பில்‌, மாநில சட்டமன்றம்‌ என்றாலே அதில்‌ ஆளுநரும்‌ அங்கம்தான்‌ என்று சொல்லப்பட்டுள்ளது.


அரசியலமைப்பின்‌படி ஆளுநருக்கு 3 விதமான வாய்ப்புகள்‌ உள்ளன. ஒன்று மாநில சட்டமன்றம்‌ ஒரு மசோதாவை நிறைவேற்றி அனுப்பினால்‌ அது சரியாக இருந்தால்‌ அதற்கு ஆளுநர்‌ ஒப்புதல்‌ தர வேண்டும்‌.




மசோதா நிராகரிப்பு


இரண்டாவது, சரியான மசோதா இல்லை என்றால்‌ அந்த மசோதாவை நிறுத்தி வைப்பது. நிறுத்திவைப்பது என்றால்‌ கிட்டத்தட்ட அந்த மசோதாவை நிராகரிப்பதாகத்‌தான் அர்த்தம்‌. இதை உச்ச நீதிமன்றம்‌ பல்வேறு தீர்ப்புகளில்‌ உறுதிப்படுத்தி உள்ளது. நேரடியாக நிராகரிப்பதாக இல்லாமல்‌ நிறுத்தி வைப்பது என்று அது அழைக்கப்படுகிறது. மூன்றாவது வாய்ப்பாக, மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கும்‌ முடிவை ஆளுநர்‌ எடுக்கலாம்‌.


2 வாய்ப்புகள்


அதற்கு காரணம்‌ மத்திய அரசு இயற்றியுள்ள சட்டத்திற்கு இணையாக ஒரு மசோதா தாக்கல்‌ செய்யும்‌ பட்சத்தில்‌ அதுகுறித்த தமது முடிவை எடுக்காமல்‌ அதை இறுதி செய்வது குடியரசுத் தலைவர்‌ என்பதால்‌ மசோதாவை அவரது பார்வைக்கு ஆளுநர்‌ அனுப்பி வைக்கிறார்‌. குடியரசு தலைவர்‌ அத்தகைய மசோதா மீது முடிவெடுக்க இரண்டு வித வாய்ப்புகளைப் பயனபடுத்துவார்‌. ஒன்று மசோதாவுக்கு ஒப்புதல்‌ தருவார்‌ அல்லது அதை நிறுத்தி வைப்பார்‌.


ஒரு ஆளுநரால்‌ இரண்டு வித சந்தர்ப்பங்களில் மசோதாவை நிறுத்திவைக்க முடியாது. ஒன்று பண மசோதாவை அவரால்‌ நிறுத்தி வைக்க முடியாது. இரண்டாவது ஒரு மசோதாவின்‌ மீது ஆளுநருக்கு சந்தேகம்‌ வந்து அதன்‌ மீது விளக்கம்‌ கேட்டு மசோதாவை திருப்பி அனுப்பினால்‌, அதை சட்டமன்றம்‌ மீண்டும்‌ நிறைவேற்றி அனுப்பினால்‌ அதை ஆளுநரால்‌ மறுக்க முடியாது.


அரசியல்‌ ரீதியாக மத்தியில்‌ ஒரு கட்சி, மாநிலத்தில்‌ ஒரு கட்சி ஆட்சி செய்யும்போது மத்திய அரசால்‌ நியமிக்கப்படும்‌ ஆளுநர்‌ அரசியல்‌ ரீதியாக செயல்படுகிறார்‌ என்கிற பார்வை இருக்கும்‌, ஆனால்‌ அரசியலமைப்பின்படி ஆளுநரை நியமிப்பது குடியரசுத் தலைவர்தான்‌. ஆளுநர்‌ தனக்கு
கொடுத்துள்ள கடமையை ஆற்றும்போது எந்த குழப்பமும்‌ வராது என ஆளுநர்‌ ரவி பதிலளித்தார்‌.


அடுத்து வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டம்‌ குறித்து ஒரு மாணவர்‌ எழுப்பிய கேள்விக்கு ஆளுநர்‌ பதிலளித்தார்‌.


வெளிநாட்டிலிருந்து ஒரு பெரிய தொகையை ஒரு தனி நபரோ, தொண்டு நிறுவனமோ நன்கொடை ஆக பெறுகிறது. அது ஒருமுறை என்றால்‌ பிரச்சனை இல்லை. தொடர்ச்சியாக அத்தகைய நன்கொடை வருமானால்‌ அங்கு வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டம் வரும்‌. இந்த சட்டம்‌ மூலம்‌ அனைத்து வெளிநாட்டு நன்கொடைகளும்‌ மத்திய உள்துறை அமைச்சகத்தின்‌ கண்காணிப்பின்கீழ்‌ வரும்‌. இப்படி வரும்‌ நன்கொடைகளை சில தொண்டு நிறுவனங்கள்‌ மற்றும்‌ சில நிறுவனங்கள்‌ தேசத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது.


உதாரணமாக தென்‌ தமிழ்நாட்டில்‌ அணுசக்தி திட்டத்துக்கான வேலையை தொடங்கும்‌ போதெல்லாம்‌ பாதுகாப்பு அச்சுறுத்தல்‌, காலநிலை மாற்ற தாக்கம்‌, அணுஉலை வெடிக்கலாம்‌, மனித உரிமை மீறல்கள்‌ என்றெல்லாம்‌ சொல்லி போராட்டங்கள்‌ வெடித்தன. யாரும்‌ பசி, பட்டினியோடு நீண்ட காலம்‌ போராட முடியாது. இது குறித்து ஆய்வு செய்தபோது போராட்டங்களுக்கு பின்னால்‌ இருப்பவர்கள்‌ சிலருக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில்‌
இருந்தெல்லாம்‌ பெரிய அளவில்‌ நிதி வந்தது தெரியவந்தது.


வடகிழக்கு மாநிலங்களில்‌ போலி நிறுவனங்களை வெளிநாடுகளில்‌ ஆரம்பித்து ரூ. 200 கோடி‌ ரூபாய்‌ வரை ஆண்டுகோறும்‌ வந்தன. அவை மதமாற்றத்துக்காக பயன்படுத்தப்பட்டன. இத்தகைய செயல்பாடுகளை எப்படி அனுமதிக்க முடியும்‌? இதுபோன்ற தேசநலனை பாதிக்கும்‌ விவகாரங்களில்‌ வெளிநாட்டு நன்கொடை பயன்படுத்துவதை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. நீண்ட ஆண்டுகள்‌ இந்த சட்டம்‌ பெயரளவிலும்‌, சில இடங்களில்‌ ஊழல்‌ காரணமாகவும்‌ நிறைவேற்றப்படாமல்‌ இருந்தது. 




கேரளாவில்‌ விழிஞ்சம்‌ துறைமுகம்‌ அமைக்கும்‌ திட்டம் பெங்களுரிலிருந்து செயல்படும்‌ ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல்‌ என்கிற மிகப்பெரிய மனித உரிமைகள்‌ அமைப்பின்‌ இடையூறு காரணமாக ஓராண்டுக்கும்‌ மேலாக தடைபட்டது. இந்தியாவின்‌ பசுமை தீர்ப்பாயம்‌, உச்ச நீதிமன்றம்‌, அரசு அனைத்தும்‌ சரியான திட்டம்‌, எந்த பிரச்சனையும்‌ இல்லை என்று சொல்லியும்‌ திட்டம்‌ நிறைவேற்றப்பட முடியவில்லை. இந்த ஆம்னெஸ்டி அமைப்பு குறித்து விசாரணை நடத்தியபோது அவ்வமைப்புக்கு வெளிநாட்டிலிருந்து பண உதவி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.


தூத்துக்குடியில்‌ நடந்த ஸ்டெர்லைட்‌ போராட்டத்தில்‌ அந்நிய நிதி பெருமளவில்‌ பயன்படுத்தப்பட்டது. போராட்டத்திற்கு காரணமான அமைப்புகள்‌ வெளிநாட்டு நன்கொடை பெற்றது தெரியவந்துள்ளது. துரதிருஷ்டவசமாக ஸ்டெர்லைட்டுக்கு எதிரான இந்த போராட்டத்தில்‌ போலீஸ்‌ துப்பாக்கிச்‌ சூட்டில்‌ அப்பாவி மக்களின்‌ உயிர்கள்‌ பலியானது கவலைக்குரிய விஷயம்‌.


ஏன்‌ ஸ்டெர்லைட்‌ ஆலைக்கு எதிராக போராட்டம்‌ நடந்தது? இந்திய தேவையில்‌ 40% தாமிரத்தை ஸ்டெர்லைட்‌ ஆலை உற்பத்தி செய்தது. அதை மூடி விட்டார்கள்‌. இதனால்‌ இந்தியாவின்‌ 40% தாமிர தேவை பாதிக்கப்பட்டுள்ளது.


தாமிரம்‌ ஏன்‌ முக்கியமானது என்றால்‌ இந்தியாவின்‌ மின்னணு உற்பத்திக்கு முக்கிய தேவை. இதை முடக்கும்‌ வேலையில்‌ பின்னணியில்‌ இருந்தவர்கள்‌ அந்நிய நிதியை பெற்று வந்தது தெரியவந்துள்ளது. என்னுடைய தனிப்பட்ட கருத்து, இவ்வாறு இந்தியாவுக்கு எதிராக அந்நிய நிதி மூலம்‌ செயல்படும்‌ இத்தகைய நிதி உதவிகளை முற்றிலுமாக தடுக்க வேண்டும்‌, அது தற்போது இயலவில்லை ஆனால்‌ போக போக அது சரியாகும்‌.


மக்கள்‌ தங்கள்‌ உரிமைக்காக, அரசுக்கு எதிராக போராடலாம்‌. அதற்கு அவர்களுக்கு முழு உரிமை அரசியலமைப்பில்‌ கூறப்பட்டுள்ளது. அதே நேரம்‌ தேச நலனை பாதுகாக்க அரசு தன்னுடைய பணியை செய்துதான்‌ ஆகவேண்டும்‌. வேண்டுமென்றே தேச ஒற்றுமைக்கு குந்தகம்‌ விளைவிக்க முயற்சி செய்வதும்‌ வளர்ச்சியை தடுக்க முயல்வதும் மிகவும்‌ தவறு.


பாப்புலர்‌ பிரண்ட்‌ அமைப்பு இந்தியா சகோதரத்துவ அமைப்பு என்று ஒரு அமைப்பை ஆரம்பித்துக்கொண்டு வெளிநாட்டிலிருந்து நிதி பெற்று இந்தியாவில்‌ தீவிரவாத நடவடிக்கையில்‌ ஈடுபடுகிறது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலிருந்து ஆப்கானிஸ்தான்‌, ஈரானுக்கு சென்று ஐஎஸ்‌ அமைப்பில்‌ சேருபவர்களில்‌ 90% பேர்‌ பாப்புலர்‌ ஃபிரண்ட்‌ அமைப்பின்‌ மூலமாகவே செல்கின்றனர்‌.'' 


இவ்வாறு ஆளுநர்‌ பதில்‌ அளித்ததாக ஆளுநர்‌ மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.