ஒரு பகுதியில் அதிகமானோர் தேர்ச்சி பெற்றனர் என்ற காரணத்துக்காக, தேர்வில் முறைகேடு நடந்ததாகக் கூறுவது தவறு என்று டிஎன்பிஎஸ்சி மீண்டும் விளக்கம் அளித்துள்ளது.


முன்னதாக தட்டச்சர் தேர்வில் சங்கரன் கோவில் பகுதியில் 450 பேர் தேர்ச்சி பெற்றதாகவும் அதனால் முறைகேடு நடந்திருக்கலாம் எனவும் வெளியான தகவலை அடுத்து டிஎன்பிஎஸ்சி இவ்வாறு தெரிவித்துள்ளது. எந்த வித முகாந்திரமும் முறைகேடு என முடிவுக்கு வருவது தவறு என்றும் டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. 


தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 11 வகையான பணிகளுக்கு ஆண்டுதோறும் குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஒரே தேர்வாக நடத்தப்பட்டு, நேர்காணல் எதுவும் இல்லாமல் தேர்வாகும் அரசுப் பணி என்பதால், இந்தத் தேர்வுக்குகு தேர்வர்கள் மத்தியில் வரவேற்பு அதிகம்.


இதற்கிடையே குரூப் 4 தேர்வுகளுக்காக 7,301 பேரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு, கடந்த ஆண்டு மார்ச் மாதம் 30-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. தேர்வு, கடந்த ஜூலை 24ஆம் தேதி அன்று நடத்தப்பட்டது. சரியாக 8 மாதங்கள் ஆன நிலையில் மார்ச் 24ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகின.


இதற்கிடையே தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக சர்ச்சை எழுந்தது. இதற்கிடையே தென்காசியில் ஒரு குறிப்பிட்ட பயிற்சி மையத்தைச் சேர்ந்த 2 ஆயிரம் பேர் குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றனர். ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த, அடுத்தடுத்த பதிவெண்களைக் கொண்ட தேர்வர்கள், ஒருசேரத் தேர்ச்சி பெற்றது எப்படி என்று கேள்வி எழுந்துள்ளது. அதேபோல  நில அளவர் தேர்வில் காரைக்குடி அருகே 700 பேர், ஒரே மையத்தில் தேர்வெழுதி தேர்ச்சி பெற்றனர். இதுவும் பல்வேறு கேள்விகளை, எழுப்பி முறைகேடு என்ற சர்ச்சையை எழுப்பியது. எனினும் அதற்கு டிஎன்பிஎஸ்சி மறுப்பு தெரிவித்தது.


புதிய சர்ச்சை


இந்நிலையில் மீண்டும் புதிய சர்ச்சை எழுந்துள்ளது. 2500 தட்டச்சர் காலி பணியிடங்களில் 600-க்கும் மேற்பட்டவர்கள் தென்காசியில் இருந்து தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் 450 பேர் தென்காசி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் இருந்து தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒரே ஊரில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களில் இருந்து, அதிகளவிலான தேர்வர்கள் தேர்ச்சி பெற்றதால், முறைகேடு நடந்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. தேர்வு பெற்றவர்கள் அனைவரும் ஒரே பயிற்சி மையத்தில் இணைந்து பயின்றவர்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. 


இந்நிலையில் இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி மீண்டும் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி கூறும்போது, ''ஒரு பகுதியில் அதிகமானோர் தேர்ச்சி பெற்றனர் என்ற காரணத்துக்காக, தேர்வில் முறைகேடு நடந்ததாகக் கூறுவது முறையல்ல. எந்த வித முகாந்திரமும் முறைகேடு என முடிவுக்கு வருவது தவறு'' என்று டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.