நீட் தேர்வு பாதிப்பு தொடர்பாக அறிய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் திமுக அரசு ஒரு குழுவை நியமித்தது. இந்தக் குழு மின்னஞ்சல் மூலம் பாதிக்கப்பட்டவர்களிடம் புகார்களை பெற்று வருகிறது. அத்துடன் மக்களின் கருத்துகளையும் கேட்டு வருகிறது. இந்தச் சூழலில் இக்குழு அமைத்தது தொடர்பாக பாஜக தலைவர் கரு.நாகராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில் ஒரு பிரமாணப்பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதன்படி, “நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் குழு ஒன்றை அமைத்து தமிழ்நாடு அரசு தேவையில்லாமல் நாடகம் நடத்துகிறது. இந்தத் தேர்வை ஏற்கெனவே உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ளது. மேலும் இந்த நீட் தேர்வு 2012ஆம் ஆண்டு திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. நமது நாட்டில் உள்ள கூட்டாட்சி தத்துவம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவின் தலைவரான நீதியரசர் ஏ.கே. ராஜன் கடந்த 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ஆம் தேதி நீட் தேர்வு பாதிப்பு தொடர்பாக பெரியார் திடலில் பேசியுள்ளார். இந்த நிகழ்ச்சி தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் உள்ளது. அப்படி இருக்கும் போது அவர் தலைமையில் ஒரு குழுவை அமைத்தால் அது எப்படி பாரபட்சம் இல்லாமல் செயல்படும். 


இதுபோன்று மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடிக்காமல், மாநிலத்திற்கு நலன் தரும் ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கு மாநில அரசு உறுதுணையாக இருக்கவேண்டும். மருத்துவ படிப்புகளுக்கு இடம் நிரப்புவதில் நடைபெற்று வந்த ஊழலை தடுக்கவே இந்த நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. இதற்கு முன்பு மருத்துவ படிப்பில் சேர பல லட்சம் லஞ்சம் கொடுக்கப்பட்டது அனைவரும் அறிந்த ரகசியம். தேவையில்லாத நாடகங்களை நிகழ்த்துகிறார்கள். அப்படி ஊழல் செய்துவந்த நிறுவனங்கள் தூண்டு விடுவதால் சில அரசியல்வாதிகள் நீட் தேர்விற்கு எதிராக பேசி வருகின்றனர்” எனக் கூறியுள்ளார். 


மேலும் 2017-ஆம் ஆண்டு நீட் தேர்வு வந்தபின்பு தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர்களின் தரம் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நீட் தேர்வால் அதிகளவில் சமூக மற்றும் பொருளாதார ரீதியில் நலிந்த மக்கள் பயன்பெற்று உள்ளதாக அவர் கூறியுள்ளார். கடந்த  நான்கு ஆண்டுகளில் நீட் தேர்வு மூலம் சேர்க்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் முதலாம் ஆண்டிலேயே சிறப்பாக செயல்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு முதல் முறையாக 2013ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வை அப்போது உச்சநீதிமன்றம், கல்லூரிகளில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் எம்சிஐ தலையிட முடியாது என்று கூறி ரத்து செய்தது. அதன்பின்னர் 2016-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் 2013-ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பை மறுசீராய்வுக்கு எடுத்து கொண்டது. 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்  நீட் தேர்வு நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.  இதன் காரணமாக 2016 முதல் மீண்டும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது. 



மேலும் படிக்க: சோசியல் மீடியாக்களிலும், யூ ட்யூபிலும் அதிகரிக்கும் அவதூறு, ஆபாச செயல்பாடுகள் : இது டி.ஜி.பியின் எச்சரிக்கை.!