நீட் தேர்வு தொடர்பான பாதிப்புகளை ஆய்வு செய்ய ஆளும் திமுக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு ஒன்றை அமைத்திருந்தது. அரசு தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என அளித்திருந்த வாக்குறுதியின் அடிப்படையில் இந்த குழு அமைக்கப்பட்டிருந்தது. இந்தக் குழு நீட் தேர்வு ஏற்படுத்திய பாதிப்புகள் தொடர்பாகக் கள ஆய்வுகளை மேற்கொண்டது மற்றொருபக்கம் பொதுமக்களிடமிருந்து இதுதொடர்பான கருத்துகளும் பெறப்பட்டன 25000க்கும் மேற்பட்ட மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டிருப்பதாகவும் பெரும்பாலான மனுக்கள் நீட் தேர்வுக்கு எதிரானதாக இருப்பதாகவும் ஏ.கே.ராஜன் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.





இதற்கிடையே அரசு அமைத்திருக்கும் ஏ.கே.ராஜன் குழுவை எதிர்த்து பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். நீட் விவகாரத்தில் மாநில அரசு அரசியலாக்கி மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் ஏழை மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பை உறுதி செய்ய அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடும் உள்ளதாகவும் நீட் குறித்து தெளிவான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கி உள்ள நிலையில் தமிழக அரசு எடுத்துள்ள நிலைப்பாடு உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது என பாஜக பொதுச்செயலாளர் கரு.நாகராஜனின் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 



வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம் 'நீட் தேர்வு விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரான நிலைப்பாட்டை மாநில அரசு எடுக்க முடியாது’ எனக் கூறியுள்ளது. 
அரசுத்தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரத்திடம் விளக்கம் கேட்ட நீதிபதிகள், நீட் தேர்வு உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நடத்தப்படும் நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை பாதிக்கும் வகையில் எந்த மாநிலங்களும் முடிவெடுக்க கூடாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருந்த நிலையில், நீட் தேர்வை பாதிக்கும் வகையில் தமிழக அரசால் குழு அமைக்கப்பட்டிருக்கிறதே அது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அனுமதி பெறப்பட்டதா? என கேள்வி எழுப்பினர்






இதற்கு பதிலளித்த அரசுத் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், ஆளுங்கட்சி தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டதன் அடிப்படையிலேயே நீட் தேர்வு ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து ஆராய ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் கொள்கை முடிவை எடுக்கவே இந்த குழுவை தமிழக அரசு அறிவித்துள்ளதாக தெரிவித்தார். இருப்பினும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக இந்த குழு அமைக்கப்பட்டிருப்பதால் இது குறித்து ஒருவாரத்தில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை வரும் திங்கள் கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ஏ.கே.ராஜன் குழு ரத்து செய்யப்படுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து பல்வேறு கட்சிகளும் தங்களது கவலையை வெளிப்படுத்தியுள்ளன. பா.ம.க.வின் அன்புமணி ராமதாஸ் கூறுகையில், 


‘ஏ.கே.ராஜன் குழு அமைக்கப்பட்டது செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளிக்கக்கூடும். அது நீட் தேர்வை ரத்து செய்வதற்காக தமிழக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையை ஏற்படுத்தும், அத்தகைய சூழல் ஏற்பட்டால் தமிழ்நாட்டில் நீட் தேர்வு தொடர்ந்து நடத்தப்படுமோ? ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவு நிரந்தமாக கருகி விடுமோ? என்ற மாணவர்களின் ஐயமும், அச்சமும் நியாயமானவை தான். அந்த அச்சத்தைப் போக்கவும், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறவும் அடுத்தடுத்து என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன? என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும். மாணவர்களிடம் ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்க இது அவசியமாகும்’  எனக் குறிப்பிட்டிருந்தார். 


ஏ.கே.ராஜன் குழு அமைக்கப்பட்டதற்கான அரசாணை ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதா? வழக்கறிஞர் விஜயனிடம் அதுகுறித்த சட்டபூர்வ விளக்கத்தைக் கேட்டறிந்தோம். அவர் கூறுகையில்,’ நீட் தேர்வை ரத்து செய்வது மத்திய அரசின் சட்டமியற்றும் அதிகாரத்துக்கு உட்பட்டதா அல்லது  மாநில அரசின் சட்டமியற்றும் அதிகாரத்துக்கு உட்பட்டதா என்பதை முதலில் ஆய்வு செய்யவேண்டும். கல்வி பொதுப்பட்டியலில் உள்ளது, நீட் தேர்வு மத்திய அரசால் உருவாக்கப்பட்டது. அதனால்தான் அரசியல் சாசன விதிகளின்படி நீட் தேர்வை ரத்து செய்வது சாத்தியமற்றது (Constitutionally Impossible). மேலும் ஏ.கே.ராஜன் கமிட்டி நீட் குறித்த பரிந்துரைக்காகதான் அமைக்கப்பட்டதே தவிர அதற்கு சட்டமியற்றும் அதிகாரம் கிடையாது. அதன் பரிந்துரைகளை மெடிக்கல் கவுன்சில் ஒதுக்கிவைப்பதற்கும் வாய்ப்புள்ளது. ஏ.கே.ராஜன் கமிட்டியை அமைக்கும் அதிகாரம் அரசுக்கு இருக்கிறதா என்பதை விட, அந்தக்கமிட்டியின் அதிகார எல்லை எதுவரை என்பது குறித்த தெளிவு அரசுக்கு வேண்டும். ஏ.கே.ராஜன் கமிட்டி அமைக்கப்பட்டது நல்லதுதான் ஆனால் அது ரத்து செய்யப்படுமா இல்லையா என்பது உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பொருத்தது’ என்றார். 


வருது அடுத்த தடுப்பூசி : மாடர்னா இறக்குமதிக்கு இந்தியா அனுமதி!